பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 157


"சரி இப்போ ஆக வேண்டியதுக்கு வழியச் சொல்லு.

"பொறு. தூத்துக்குடிக்குப் போறேன். நாலு மாத்திரை வாங்கிட்டு வாரேன். யாரிடமாவது கொடுத்து அனுப்புறேன். நான் அங்க வர முடியாது. ஒங்க அண்ணனுக்கும் எனக்கும் அடித்தடி மட்டும் வரல. இப்போ வந்தால் நல்லா இருக்காது."

"ஒன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தால், எத்தனையோ விஷயம் புரியுறாப்போல இருக்குது. நீ சொல்றத ஒத்துக்க முடியாட்டாலும் ஆறுதலா இருக்கு. அப்போ நான் வரட்டுமா? அப்பா தனியா இருப்பாரு"

"கடலுக்கு மத்தியில தாகத்துக்கு தண்ணி கிடைக்காத கதை ஒங்க அப்பாவோட கதை, ஒன்னோட கதை?”

"நான் வரட்டுமா..?” "அவ்வளவு சீக்கிரமா ஒன்ன விட்டுடுவோமா? அடியே பகவதி அம்மாளு! ஒன் நாத்தினார உபசரிக்கிற லட்சணமாடி இது?"

பகவதி அம்மாள் சிரித்துக்கொண்டே, ஒரு தட்டில் வறுத்த மொச்சக்கொட்டைகளையும், கூடவே ஒரு டம்ளர் 'கருப்பட்டிக் காபியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு "இவிய பேச்ச கேளாதம்மா. ஊர்ல யாரும் சண்ட போடலன்னா இவியளுக்கு தூக்கம் வராது" என்றாள்.

"நான் இப்போ சொல்றதுதான் தங்கச்சி. ஒன் புருஷங் கூட இனிமேல் உன்னால இருக்க முடியாது. அந்த நரிப் பயல் ராமபத்திரனப்பத்தி எனக்கு நல்லா தெரியும். என் உதவி ஒனக்குத் தேவன்னா ஒரு லட்டர் போடு. நான் அங்க வந்து நிக்குறேன்.”

"மருந்த எப்படிண்ணே கொடுக்கணும்? எப்பண்ணே கிடைக்கும்?”

"இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்திரு.”