உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 163


வருவான். அப்புறம் நம் சொந்தக்காரர்கள் எனப்படுபவர்கள் இந்த அப்பாவியைகட்டிவைத்து ‘நீ எப்படிடா போலாம்’ என்று உதைக்கலாம். வேண்டாம்.

மணிமேகலை கூனிக் குறுகி நடந்தாள். “அந்த அம்மாவோட குடியக் கெடுத்திட்டியேய்யா. நீ சூதுவாதுல்லாம போனாலும், அந்த வீட்ல இருக்கவிய சூதுவாது சூன்யக்காரப் பேயுவன்னு ஒம் களிமண்ணு மூளையில ஏன் படல?” என்று சற்றுமுன்பு ராமக்காவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ‘கூத்து’ கோவிந்தன் சந்திரமதியையும், மணிமேகலையையும் ஒருசேர நினைத்துக்கொண்டே பயந்துபோய் திருட்டுத்தனமாகப் பார்த்தான்.

மணிமேகலை குனிந்த தலை நிமிராமல் அக்கம்பக்கம் அவளுக்காக வருந்தும் எளியவர்களைப் பார்க்காமல் நடந்தாள். திடீரென்று ஒரு கம்பீரமான குரல்.

“சூட்கேஸ் கொடும்மா. இந்த அண்ணங்கிட்ட கொடும்மா.”

ரத்தினம் கம்பீரப் பார்வையுடன் நின்றான். தலையில் முண்டாசு. உடம்பில் பனியன். தார் பாய்த்த வேட்டி.

மணிமேகலை மெளனமாக பெட்டியைக் கொடுத்து விட்டு அவன் பின்னால் நடந்தாள். எதிரே சந்திரன் வந்தான். கரும்புத் தோட்டத்தில் பாமாவின் கையை வங்கி மோதிரக் கையோடு அழுத்திய அந்த இடத்தில் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டு, ஒரு ஆமணக்குச் செடியைப் பிடித்து, அதை பாமாவாகப் பாவித்து அதன் கொட்ட முத்தை மோதிரமாக நினைத்து அழுந்தப் பிடித்து, சொல்லி மாளாத கற்பனைச் சுகங்களைக் கண்டுவிட்டு, வயிற்றுப் பசி, காதல் பசியை அடக்கியதால் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அவன் அக்கா எங்கே போகிறாள் என்று புரியாமல் தவித்து நின்றபோது, ரத்தினம் ‘எட்டு ஊருக்கு’க் கேட்கும்படி பேசினான்.