பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 ★ இல்லம்தோறும் இதயங்கள்


தெரியாதாம். ஆனால் என்னோட தாலி எல்லோருக்கும் தெரியுது. என் புருஷனுக்குத்தான் தெரியாமல் போயிட்டு. நான். நான். சந்திரமதியில்ல அண்ணே.”

'கூத்து' கோவிந்தன் ஓடினான். சேலத்து ரயிலுக்கு நேரமாகிவிட்டதால் அல்ல. அவனால் அங்கே நிற்க முடியவில்லை. நின்றால் நெடுநேரமாய் விழுந்து இந்நேரம் செத்திருப்பான்.

16

ருவாரம், ஒரு வருடம்போல் யுகம் யுகமாக ஓடியது.

மணிமேகலைக்கே ஆச்சரியம். தந்தையின் வீட்டிலும், கணவனின் வீட்டிலும், அங்குள்ளவர்களின் முகச்சுழிப்புக்கும், ஜாடைப் பேச்சுக்கும், தொட்டால் சுருங்கி செடி போல துவண்டவள், இப்போது கிட்டத்தட்ட பாதிப் பைத்தியம்போல் நடந்துகொள்ளும் இந்த காரியதரிசியின் கையைப் பிடித்தவளான காமாட்சியின் இடிபோன்ற ஏச்சுக்களுக்கு ஒரு இடிதாங்கியாய் போய்விட்டதை நினைத்து வியந்தாள். ஒருவேளை தனக்கு ரோஷம் போய்விட்டதோ என்றுகூட சந்தேகப்பட்டாள். இல்லை. இல்லை. மனிதர்களின் பேச்சுக்கள் முக்கியமல்ல; அதன் பின்னணியும் முன்னணி நோக்கமுந்தான் முக்கியம். 'டார்லிங்' என்ற வார்த்தையைவிட "என்னடி இழவெடுத்த பய மவள என்ற வார்த்தைகள், மாறாத-மாற்றமுடியாத பேரன்பைக் காட்டுவதாகக் கூட இருக்கலாம். அதோடு பிற மனிதர்களைப் புரியப் புரிய நம் மனமும் நமக்குப் புரிகிறது. இதனால்தான் மகான்கள் 'சுகமும் துக்கமும் உன்னிடமே உள்ளன என்று உரைத்தார்களோ? இதனால் கல்லூரியில் பாடமாக வந்த 'பாரடைஸ் லாஸ்ட்'டில் ஒரு