பக்கம்:ஈச்சம்பாய்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

135



காரை கொஞ்சம் குடுக்கிறீங்களா' காமாட்சி! நீ பஜார்ல போயி தேடு. ஒரே பேஜாரு போச்சு.... சீக்கிரம்.... அவசரம்... போங்க... ஆளோடு வரணும். வெறுங்கையோட வரக்கூடாது. போங்கய்யா. சீக்கிரமா.... ஜல்தியா..... குயிக்கா.... போங்கய்யா... போங்க. இந்தாப்பா, ஏய்யா அழுவுற? ஒம்மா கிடச்சிடும்... நானிருக்கேன்."

"நீ எதுக்குய்யா? எனக்கு அம்மாதான் வேணும்."

ஒருமணி நேரம் உருண்டோடியது.

வெறுங்கையோட வர விரும்பாதவர்கள்போல் அத்தனை பேரும் தத்தம் வாகனங்களில் ஆளுக்கொரு கிழவியாகக் கொண்டு வந்தார்கள். அத்தனை கிழவிகளும், 'இந்த அநியாயத்தக் கேக்க ஆளில்லயா? அட கடவுளே, சும்மா போய்க்கிட்டிருந்த எங்கள இழுத்துக்கிட்டு வந்தா என்னடாப்பா அர்த்தம். நாங்க என்ன தப்பு பண்ணினோம்? அநியாயமா கொண்டாறதுக்கு எத்தனாவது சட்டத்துல இடமிருக்கப்பா?" என்று கேட்டபோது, ஆணையாளருக்கு மூளை குழம்பியது.

இந்த அமளிக்குள், ஊர்நல ஊழியர் சீனிவாசன், திமிறிக் கொண்டிருந்த பொன்னம்மா பாட்டியை, சைக்கிள் கேரியரில் பலவந்தமாய்ப் பிடித்து வைத்துக்கொண்டே, சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தார். முனுசாமி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தான். தாயும் தனயனும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். சீக்கிரமாய் வீட்டுக்குப் போக நினைத்து, ஜீப்பில் போகாமல், டிரைவரிடம் அவளை முட்டாள்தனமாக ஒப்படைத்த சீனிவாசனுக்கு நிம்மதி. கமிஷனருக்குச் சந்தோஷம். பப்ளிசிடி ஆசாமிக்குத் தன் கார் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/137&oldid=1371901" இலிருந்து மீள்விக்கப்பட்டது