பக்கம்:ஈச்சம்பாய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

25



பிரகாசிக்குப் புரிந்து விட்டது. அம்மாவுக்குக் கூடு பிடிக்கவில்லை, வேறொரு கூடு கட்டினால்தான் வரும். இன்னும் பத்து நாளைக்கு எப்படிக் கஷ்டப்பட முடியும்! கஷ்டத்தைத் தாக்குப் பிடிக்கலாம்! ஆனால் காதலை...

மஞ்சள் பிரகாசி சோகத்தால் விழுங்கப்படாமல் சோகத்தை விழுங்கிக் கொண்டது. புதிய கூடு கட்டுவதற்காகப் புதிய இடங்களுக்குப் பறந்து புத்தம் புதுப் பொருட்களைக் கொண்டு வந்தது. நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை, அந்த இளம் பெண், தனியாகத் தினமும் வருவதைப் பார்த்தது. அதே சமயம் கூடு கட்டும் வேலை மும்முரத்தில் அந்தக் குருவிக்கு அதன் தாத்பரியம் புரியவில்லை.

அன்று மஞ்சள் குருவி, சிறிது கிறங்கிப் போயிருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு புதரில் கிடந்த பாம்புச் சட்டையைப் பற்றிய போது எங்கிருந்தோ குதித்த காட்டுப் பூனை, இதைத் துரத்தியது. பூனையின் கால்களுக்குள் பாம்புச் சட்டை மாட்டிக் கொண்டது. மஞ்சள் பிரகாசிக்கோ அதை நறுக்கி, கூட்டுக்குள் வைத்து, அதைக் குருவியாள் ரசிப்பதைக் கண் குளிரப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையே ஒரு உந்து சக்தியாக, உயிரையும் பொருட்படுத்தாது, காட்டுப் பூனைக்கு நெளிந்தும் வளைந்தும் போக்குக் காட்டியது. எப்படியோ பாம்புச் சட்டையோடு மீண்டது. இந்தத் தியாகத்தைப் புரிந்துகொண்டதுபோல், குருவியாள் சிறிது நேரம் இதனருகே வந்து செல்லமாகக் குழைந்து விட்டுப் போய்விட்டது - பழைய இடத்திற்கு.

குருவியாள் காட்டிய சிறியதோர் காதல் வெளிப்பாட்டால் காதலின் வாய்ப்பாட்டையே அறிந்தது போல் லோசாக விசிலடித்த மஞ்சள் பிரகாசி, அப்போதுதான் அந்த மானுடப் பெண்ணைப் பார்த்தது. ஒரு மரத்தில் சாய்ந்தபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/27&oldid=1495620" இலிருந்து மீள்விக்கப்பட்டது