பக்கம்:ஈச்சம்பாய்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஈச்சம்பாய்



பிடியிலிருந்து விடுவித்து, அவரைத் தூக்கி நிறுத்தி, அருகே கிடந்த சோபாவில் உட்கார்த்தினாள்.

அவர் கையிலும் கால் முட்டிகளிலும் தெரிந்த ரத்தச் சிராய்ப்புக்களைப் பார்த்துவிட்டு, ஏதோ ஒரு களிம்பு பாட்டிலை எடுத்தபடியே, "என்ன ஒங்கபாட்டுக்கு இப்டியா நடக்கிறது? நேக்கு ஒரு குரல் கொடுத்தால் என்ன?" என்று செல்லமாய் அதட்டியபடியே, களிம்பை எடுக்கப் பாட்டிலைத் திறக்கப் போனாள்.

வெளியே இருந்து உள்ளே ஊடுருவி வந்த கதவோசை, அவளுக்கு அப்போதைய பதற்றத்தில் கேட்கவில்லை. ஆனால் அவருக்குக் கேட்டது. பல்லைக் கடித்தபடியே கத்தினார்.

"மொதல்ல கதவைத்திற...... பாவம், எவ்வளவு நேரமாய் ஒருத்தரைக் காக்க வைக்கறது?"

லட்சுமி மாமி வேண்டாமல் எழுந்து, வெறுப்பாக நடந்து கதைவைத் திறந்தாள். கணவருக்குக் கேட்காத குரலில், "கதவு திறக்காட்டால் போக வேண்டியதுதானே" என்று தட்டும் கரங்களுக்கு வார்த்தைகளால் சூடு போட நினைத்தபடியே கதவை விலக்கினாள். சிரித்தபடியே உள்ளே வந்த மீனாட்சி, சோபாவில் தலைவிரி கோலமாய்க் கிடக்கும் பஞ்சாபகேசனைப் பார்த்துவிட்டு முகத்தை ஆச்சரியமாக்கினாள். பிறகு, "குத்துவிளக்குப் பூஜை சம்பந்தமாக் கேட்டுண்டு போலாம்னு வந்தேன்” என்றாள்.

மாமி பதிலளித்தாள்.

"அதுக்குத்தான் நாள் இருக்கே? இப்ப என்ன அவசரம்?"

"இப்பவே பேரைக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணிக்கணுமாம், மாமி. நேக்கு வீட்டுல அவசரம் வேலையை நடுவுல விட்டுட்டு வந்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/74&oldid=1372003" இலிருந்து மீள்விக்கப்பட்டது