பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஈரோடு மாவட்ட வரலாறு


முதல் முறையாக திருப்பூரில் 'விற்பனைக்குழு' தொடங்கப்பட்டது. முதலில் பருத்தி மட்டுமே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 1950இல் கோபி, ஈரோடு ஆகிய இடங்களில் "விற்பனைக் குழு" தொடங்கப்பட்டு நிலக்கடலையும் புகையிலையும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

சென்னையில் "தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனை வாரியம்", ஏற்பட்டு மாவட்டம் தோறும் “ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்"தொடங்கப்பட்டன. கோவை மாவட்ட விற்பனைக் குழுவிலிருந்து 1988ஆம் ஆண்டு “ஈரோடு மாவட்ட விற்பனைக் குழு" பிரிந்தது. மாவட்டம் முழுவதும் 25 ஊர்களில் "விற்பனைக் கூடங் கள்" தொடங்கப்பட்டன.

பருத்தி, நிலக்கடலை, புகையிலை, மஞ்சள், மக்காச்சோளம், கம்பு, ராகி, நெல், மிளகாய், கரும்புச் சர்க்கரை, வெல்லம், எள், ஆமணக்கு, தேங்காய், சூரியகாந்தி ஆகியவை விற்பனைக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, ஈரோடு, தாளவாடி ஆகிய இடங்களில் பட்டுக் கூடுகளும் விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகளுக்குப் பல நன்மைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செய்கின்றன. மறைமுக, நேரடி விற்பனை மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக உரிய விலை கிடைக்கிறது.

பல ஊர்களில் வாரம் ஒரு முறை வாரச் சந்தைகள் கூடுகின்றன. அவைகள் சிலவற்றில் கால்நடைகளும் விற்பனைக்கு வருகின்றன. தாராபுரம், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் நாள் தோறும் உழவர் சந்தைகள் கூடுகின்றன.

பருவமழை தவறுதல், பெருமழை, ஆள் பற்றாக்குறை, கட்டுப்படியாகாத விலை ஆகியவற்றால் விவசாய நிலத்தின் பரப்பு கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. நரிசுநிலம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. வேளாண்மையில்லாத உபயோகத்துக்குப் பயன்படும் நிலத்தின் பரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.