பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

3. நாடும் நாட்டுப் பிரிவுகளும்


கொங்கு நாடு

வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரிமுனையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையும் எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு சேர. சோழ, பாண்டிய நாடுகளுடன் தொண்டைநாடு, கொங்குநாடு ஆகியனவும் சேர்ந்து ஐந்து பகுதிகளாக விளங்கியது.

‘வியன் தமிழ்நாடு ஐந்து’ என்று, தண்டியலங்கார மேற்கோள் பாடலும், 'தமிழ் மண்டிலம் ஐந்து" என்று திருமூலரின் திருமந்திரமும் கூறுகின்றன. தமிழின் தொன்மையான தொகைப்பாடல்களான சங்க இலக்கியங்களில் பல இடங்களில் 'கொங்கு' 'கொங்கர்' என்னும் சொல்லாட்சிகள் குறிக்கப் பெறுகின்றன.

'ஆகெழு கொங்கர் நாடு"
"கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்து'
'கொங்கர் படுமணி ஆயம்'

என்பன சங்க இலக்கியத் தொடர்கள்.

பெயர்க்காரணம்

கொங்கு என்றால் காடு, பொன், மணம், தேன் என்று பல பொருள்கள் உண்டு, காடுகள் மிகுந்த நாடு, பொன்நாடு, மண நாடு, தேன் நாடு என்ற பொருள்களில் கொங்கு நாட்டிற்குப் பெயர் அமைந்தது என்பர். கொங்கின் உள்நாட்டுப் பிரிவுகள் பல தலைநகர்களால் பெயர் பெற்றது போல 'கொங்கு' என்ற பழம்பெரும் ஊரால் இந்நாட்டிற்குப் பெயர் வந்திருக்கலாம். தாராபுரம் அருகில் உள்ள 'கொங்கு' என்ற அந்த ஊர் இன்று கொங்கூர் என வழங்கப்பெறுகிறது.

எல்லைகள்

வடக்கில் பெரும்பாலையையும் தெற்கில் வைகாவூர் நாட்டுப் பழனியையும் மேற்கில் வெள்ளியங்கிரி மலையையும் கிழக்கில்