பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

21. விடுதலைப் போர்


வணிகம் செய்ய வந்து இந்தியாவை வளைத்துப்பிடித்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அகற்ற இமயம் முதல் குமரி வரை மக்கள் வெள்ளம் வீறிட்டெழுந்த போது ஈரோடு மாவட்டம் தன் உரிய பங்கைச் செலுத்த தவறவில்லை.

தீரன் சின்னமலை

ஈரோட்டு மண்ணின் முதல் விடுதலை வீரன் தீரன் சின்னமலை (1756-1805) திப்பு சுல்தானுக்கு உதவியதுடன் 1801, 1802, 1804 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற போரில் வெள்ளையரை முறியடித்துத் துரோகத்தால் வீழ்ந்து 31.7.1805இல் சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தார். அவருடன் தம்பண்ணன், கிலேதார் என்ற அவர் சகோதரர்களும், தளவதி கறுப்ப சேர்வையும் தூக்கிலிடப்பட்டனர்.

சின்னமலைக்கு ஈரோடு வாரணவாசிக்கவுண்டர், வெள்ளைக் கவுண்டர், பெருந்துறை குமாரவெள்ளை ஆகியோர் பெரிதும் துணையாக இருந்தனர். இவர் கோட்டை இருந்த ஓடாநிலையில் அரசு நினைவு மண்டபம் சுட்டியுள்ளது. அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. சின்னமலை பிறந்த மேலப்பாளையத்திலும் சமுதாயக் கூடம் உள்ளது.

திருப்பூர் குமரன்

சென்னிமலையில் பிறந்த குமரன் (1904-1932) ஈரோட்டு வணிகர் கடையில் நூல் வாங்கிப் பாவு தோய்த்து நெசவு நெய்து ஈரோடு கொண்டு வந்து கொடுத்து உரிய கூலி பெற்றார். ஈங்கூர் ரங்கசாமிக்கவுண்டர் கடையில் திருப்பூரில் வேலை செய்தவர் சட்டமறுப்புப் போரில் ஈடுபட்டு போலீசாரால் அடிபட்டு 11.1.1932ல் காலமானார். இறக்கும் வரை கொடியைத் தாங்கிக் 'கொடி காத்த குமரன்' எனப்பட்டார். சென்னிமலையில் அவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.