பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழும் தமிழ்ப் பணியும் 11

முதலிய சொற் பாகுபாடுகளும், அகம் புறமென்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோ ரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்" என்பனவாம். இவ் வாராய்ச்சியால் தமிழ் தனி மொழி யென்பது செவ்விதிற் புலனாதல் காண்க.


இனி, இம்மொழிக்கணுள்ள நூற்பரப்புக்களை உற்றுநோக்குவோம். கடல்கோள் முதலியவற்றாற் செற்றன போக, எஞ்சிய சங்க நூல்கள் பலவுள்ளன. தமிழின் இயற்கைச் சுவைநலம் ததும்பித் திகழும் பத்துப்பாட்டு, அகம், புறம், கலித்தொகை முதலிய சங்கத்துச் சான்றோர் இலக்கியங்களும், எம்மொழியினும் இத்துணைத் திட்பநுட்பங்களமைய யாத்த ஒரு நூலும் உளதோவென்று ஆராய்வார் வியப்புறும் வண்ணம் தமிழ் நிலத்தார் தவப்பயனாக எழுந்த திருக்குறளை முதலாகவுடைய நீதிநூல் இலக்கியங்களும், பாடு வோர்க்கும் கேட்போர்க்கும் இறைவன்றிருவடிப்பபற்றை விளைவித்து அன்பு மயமாய் நின்று உள்ளுருகச் செய்யும் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம் நுதலிய அருட்பாடல்களும், காப்பியச் சுவைநலம் கனிந்தொழுகும் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலியனவும், இறைவன் றிருவருள் நலத்தை அன்பர் அள்ளி உண்டு இன்புற்ற முறையையும், உலகியல் நிலைகளை வரம்பிட்டு அழகுபெற உரைக்கும் பெற்றியையும் முறையே மேற்கொண்டு வெளிப்போந்த சைவ வைணவ இலக்கியங்களாகிய பெரிய புராணம், கம்ப ராமாயணம் முதலியனவும், சிவாநுபவச் செல்வர்க