உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயபக்தி

78

உள்ளவன் இருந்த இடத்தை அவன் எழுந்தவுடன் தொட்டுப் பார்த்தால் சுடும். அதுபோல் அன்பு உடையவர்களுடைய உடம்பு குளிர்ந்து இருக்கும். சிறந்த பெரியவர்கள் அன்பு உடையவர்களாக ஓரிடத்தில் தங்கியிருந்தால் அவர்கள் தங்கும் இடம் ஓரளவு குளிர்ச்சியுடையதாக இருக்கும். அவர்கள் மூச்சுக் காற்றில் வெப்பம் அதிகமாக இராது. அவர்களுடைய குளிர்ந்த எண்ண அலைகள் நம்மைச் சூழ்ந்தால் தண்மை உண்டாகும். இதனை இன்றும் உலகில் பிரத்தியட்சமாகப் பார்க்கலாம். பசுமையே இல்லாத இடத்தில் சில பெரியவர்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் வாழும் சூழ்நிலை பசுமை நிரம்பியதாக இருக்கும்.


இவ்வாறு உள்ளம் குளிர்ந்து, கண் குளிர்ந்து, அன்பால் நிறைந்த பெரியவர்கள் முருகனைக் கும்பிட்டு வாழும் இடமாதலால் திருத்தணிகை ஈரம் நிரம்பியதாக இருக்கிறது. ஆதலால் மழை பொழிகின்ற மேகங்கள் அங்கே வரும். வந்து மழை பொழியும். மழை பொழிவதால் நீர் வளம் நிரம்பியிருக்கும். அதனால் வாவிகளும் வயல்களும் வளம் சிறந்து விளங்கும். அத்தகைய திருத்தணி மாமலையில் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறான்.

துவஜம் கட்டினவன்

வன் எந்தக் காரியத்தையும் நினைத்ததை நினைத்தபடி முடிக்கிறவன். ஒன்றை மனத்தில் சங்கற்பம் பண்ணிக் கொண்டு, 'இதை முடித்துத்தான் மறுகாரியம் பார்ப்பேன்' என்றால் அதற்கு இரண்டு அடையாளம் சொல்வது உண்டு. காப்புக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றும், துவஜம் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றும் சொல்வதுண்டு. 'இந்தக் காரியத்தைச் செய்துவிடுவேன்' என்று காப்புக்கட்டிக் கொண்டிருக்கிறான் என்றும், இதனை அடியோடு ஒழித்துவிடுவேன்' என்று துவஜம் கட்டிக்