பக்கம்:எங்கே போகிறோம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விச் சிந்தனைகள் O 33

கல்வியில் இரண்டு ஜாதிமுறை தோன்றியிருப்பது போலத் தெரிகிறது. அதாவது கிராமப்புறகல்வி, நகர்ப்புறக் கல்வி என்று குறிப்பிடுகின்றோம். கிராமப்புறக் கல்விக்கும், நகர்ப்புறக் கல்விக்குமுள்ள இடைவெளி மிகவும் அதிகம் என்பதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

நகர்ப்புறத்து இளைஞர்கள், மாணவர்கள், தரமானக் கல்வி பெறமுடிகிறது. அவர்களது அறிவுப் புலன்களுக்கு நிறைய விருந்து கிடைக்கிறது. அதனால், தரமும் திறமையும் உடைய இளைஞர்கள், நகர்ப்புறத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் கிராமப் புறத்தில் அது இல்லை. கிராமப்புற பள்ளிக் கூடங்கள் எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. சோதனைக் கருவிகள் கிடைப்பதில்லை. நல்ல நூலகம் அமைவது இல்லை. அவர்களுடைய செவிப்புலனுக்கு நிறைய விருந்துகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, கிராமப் புறக்கல்வியில், தரம் குறைந்திருக்கிறது என்பது இரண்டு கருத்துகளுக்கு இடமில்லாத ஒரு பொதுச் செய்தி. கிராமப் புறக்கல்வியை மேம்படுத்துவதில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு இப்படி ஒரு ஆலோசனைக் கூடச் சொல்ல முடிகிறது. கிராமப்புறத்தில் திருக்கோயில்கள் உண்டு. “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதை நாம் பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு கோயிலும், அந்தக் கிராமப்புறத்தினுடைய ஆரம்பப் பாடசாலையைத் தத்தெடுத்துக் கொண்டு, அந்த ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சிக்கு, அங்கு பயிலுகின்ற சிறுவர்களுடைய வளர்ச்சிக்குரிய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளலாம்; அப்படிச் செய்தால்தான் கிராமப்புறக்கல்வி வளரும்.