பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 45

புரக்கு மன்னர் குடிப்பிறந்து
       போந்தாய்! அறத்தைப் பொறைதீர்ப்பான்
கரக்க நின்றே நெடுமாயம்
       எமக்குக் காட்டக் கடவாயோ?

- கம்ப. யுத்த. பிரமாத்திரப் 224

என்று தேவர்கள் வாக்கால் இராமனைத் துதிக்கின்றோம்.

இராமனை வணங்கியபின் இராதா கிருட்டிணன் சந்நிதிக்கு ஏகுகின்றோம்.

குன்றினால்குடை கவித்ததும், கோலக்
       குரவை கோதத்துவும், குடமாட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும், காலால்
       காளியன் தலைமிதித்ததும், முதல்
வென்றிசேர் பிள்ளை நல்விளை யாட்டு
       அனைத்திலும் என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
       காணுமாறு இனிஉண்டெனில் அருளே

- பெருமாள் திருமொழி 7:9

என்ற தேவகியின் ஏக்கம் நம்மையும் பற்றுகின்றது. குலசேகரப் பெருமான் வாக்கு நம் நாக்கில் தாண்டவமாட, கண்ணனை வணங்குகின்றோம். திருமங்கையாழ்வாரும் நம் நினைவிற்கு வந்து அவர்தம் பாசுரத்தையும் கொண்டு நம்மை வணங்கச் செய்கின்றார். கடல் மல்லைத் தலசயனப் பெருமாளை வழிபட்ட அவர் வாக்காக வரும்,

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்
       பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான் நோக்கின்
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்த கோவை;
       அந்தணர்தம் அமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
       கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
       கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

- பெரி. திரு. 2.5:4

என்ற பாசுரத்தைச் சேவித்துக் கண்ணனையும் வணங்குகின்றோம்.