பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

எப்படி வளரும் தமிழ்

உலக நாடுகள் பலவும் தத்தம் தாய்மொழி வாயிலாக அறிவியல் முன்னேற்றங் கண்டு தலை நிமிர்ந்து நிற்பதை நாம் காணுகின்றோம். தமிழ் மொழியிலும் அறிவியல் வளர்ச்சி காணத் துடிதுடிக்கும் நல்லுள்ளங் கொண்டோர் சிலரும் ஈங்குளர் என்பதும் அதன் பொருட்டுப் பெருமுயற்சி மேற்கொண்டு உழைத்து வருகின்றனர் என்பதும் நமக்குக் களிப்பூட்டுவனவேயாகும். அப் பெருமக்கள் உரத்த குரல் கொடுக்கும்பொழுதெல்லாம் நம் உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது. ஆனால், முரண்பட்ட கொள்கைகள் பரவிய தமிழ்நாட்டில் அக் குரல், காற்றுடன் காற்றாகக் கலந்து விடுகிறதே தவிர, நோக்கம் முழுமைபெற உதவுகிறதா என எண்ணிப் பார்க்கும்பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது. அடிப்படையின்றி மாளிகை எழுப்ப இயலாது. அதுபோல அடிப்படையான மொழியுணர்ச்சியே இல்லாதபொழுது, அறிவியல் முன்னேற்றங் காண இயலாது.

இயற்கையும் செயற்கையும்

‘ஆங்கிலேயர் ஆங்கிலப் பற்றூட்டத் தங்கள் நாட்டிலே கழகங்கள், மன்றங்கள், சங்கங்கள் தோற்றுவிக்கவில்லை; சப்பானியர் தமது மொழியுணர்வூட்டவும் அதனைப் பரப்பவும் அவர்தம் நாட்டில் மன்றங்கள் அமைக்கவில்லை ; செருமானியர் தம் மக்களுக்கு மொழியுணர்வூட்டக் கழகங்கள் காணவில்லை. மற்ற எந்த நாட்டினரும் ஏற்படுத்த முயலாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் மன்றங்கள் ஏன்?’ என வினவுவாரும் ஈண்டுள்ளனர். அஃது உள் நோக்கங் கொண்ட வினா; தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டாத நெஞ்சங்கள் வெளிப் படுத்தும் வினா. இன்னுஞ் சிலர், பிற நாட்டினர் செய்யாத ஒன்றை நாம் செய்துள்ளோமே என்று வியந்துகொள்வதும் உண்டு. இஃது அறியாமையில் முகிழ்த்த வியப்பு. பிற நாட்டினர்க்கு மொழிப் பற்று, மொழியுணர்ச்சி யென்பது இயல்பாக வாய்த்த ஒரு பண்பு. தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ச் சான்றோர் தட்டித் தட்டி யெழுப்பியும், அரசியல் தலைவர்கள் போர்ப்பறை சாற்றியும் மொழிப்பற்றை உண்டாக்க வேண்டிய ஓர் அவலநிலை இருந்து வருகிறது. அவ்வுணர்வு