பக்கம்:எழில் விருத்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

15

இன்று இவரைப் போல் எளிய சொற்களால் உயர்ந்த கருத்துக்களை நெஞ்சை அள்ளும் வகையில் தெள்ளு தமிழ் நடையில் உள்ளுதொறும் உணர்வாகும் வண்ணம், பாலொடு தேன் கலந்தாற்போலச் சுவையாகத் தருபவரைக் காண்டல் அரிதே!

"மூர்த்தி சிறிது எனினும், கீர்த்தி பெரிது" என்பது போல, இந்நூல் பன்னிரு தலைப்புக்களில் நூற்றிருபது பாடல்களைக் கொண்டதெனினும், கம்பர் பாடிய பன்னிராயிரம் பாடல்களையும் விழுங்கிவிடுகிறது.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் தம்முடைய பாடலைக் குறித்துச் சீட்டுக் கவியில், "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மா கவிதை" எனத்தாமே பாடியிருப்பினும், அது நம் புதுமைக் கவிஞர் வாணிதாசனை உளங்கொண்டு 'தீர்க்கதரிசன' மாகப் பாடியதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

புதுமைக் கவிஞரின் 'எழில் விருத்தத்' தைக் கற்பவர்க்கு நுழைவாயிலாக ஒரு சில எடுத்துக் காட்டுதும் :

ஊரினைக் காக்கும் வீரன் ஒப்பவே ஓசை காட்டும் 'மணிக் கூண்டி'னைத் தாய்க்கும் மாமிக்கும் ஒப்பிட்டுக் காட்டும் திறன் சுவைக்கும் தன்மையதாகும்.