பக்கம்:எழில் விருத்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42

சேவல்

மண்ணில் உழைத்ததால் நேர்ந்த
    வலியினைப் போக்கவே உண்டு
கண்ணை இறுக்கியே தூங்கும்
    காளையர் கன்னியர் வீட்டுத்
திண்ணை உறங்கிடு நாய்க்கும்
    தெருவிடைத் துங்கிடும் ஆட்கும்
விண்ணில் ஒளிவரு செய்தி
    விளம்புமே வைகறைச் சேவல்!............................. 3

பெட்டைக் குணவினைக் காட்டப்
    பெருங்குரல் இன்றியே கூவும்;
பெட்டை உணவுணச் சேவல்
    பின்புறம் நோக்கியே நிற்கும்;
கட்டைச் சுவரிடை ஏறிக்
    காளையைப் போல் நடை காட்டும்;
முட்டை இடும்வரை சேவல்
    முன்புறப் பின்புறக் காவல்!.................................. 4

நாணல் முளையினை வெட்டி
    நறுக்கிய துண்டினைப் போலக்
காணும் விரலிடை முள்ளும்
    சேவலின் கைப்படை வேலாம் !
துணைத் தாக்கிடு தூண்போல்
    தோற்றிடு மட்டுமே கொத்தும் !
ஆணை எதிர்த்திடு சேவல்
    ஆண்மையே ஆண்மையென் போமே !.............. 5