பக்கம்:கடல் முத்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடல் முத்து

 ‘காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுகிறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி.”

தூணுடன் தூணாகப் பிணைந்து நின்ற பவளக்கொடியின் விம்மித் தணிந்த நெஞ்சில் அவ்வார்த்தைகள் எதிரொலித்தன. கடல் கடந்து செல்லும் மாலுமிக்குக் கலங்கரை விளக்கு உறுதுணையாக அமைவதுபோல, அன்று கடல் கடந்து சென்ற நடேசன் விடுத்துச் சென்ற ஆறுதல் மொழியை நேருக்கு நேர் நின்று நேற்றுச் சொன்ன மாதிரி அவள் உணரலானாள்.

சாயங்காலம் இருக்கும். கடை அலுவல்களைச் சீர் செய்துவிட்டுப் பவளக்கொடி திரும்பினாள். அவள் காதுகளில் தன் தாய்மாமன் ‘கண்டிச் சீமை’யிலிருந்து வந்திருக்கும் சேதி காற்றுவாக்கில் விழுந்தது. உடனே அவளுக்குத் தன் மச்சான் நடேசனின் நினைவும் கூடவே வந்தது. மாமனைக் கேட்டால் மச்சானைப்பற்றி ஏதாகிலும் தெரியுமே என்ற ஆவலில், ‘ஆயா, மாமன் வந்திருக்குதாமே; தெரியுமில்லே’ என்றாள் பவளக்கொடி.

‘அப்படியா? நீ சொல்லத்தான் எனக்குத் தெரியுது. தம்பியை விசாரிச்சா உன் மச்சானைப்பத்தி ஏதுனாச்சம் தாக்கல் கிடைக்குமே’ என்று கூறியவாறு கிழவி செல்வி புறப்பட்டாள்.

பூங்கரங்களில் கன்னத்தைப் புதைத்தவண்ணமிருந்த பவளக்கொடியின் இதயத் தடாகத்திலே நீர்மட்டத்திடை தலைமறைவாக இருந்த எண்ண மலர்கள் கம்பீரமாகத் தலை தூக்கிச் சிரித்தன. அவளும் பூப்போலப் புன்னகை பூத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/10&oldid=1181141" இலிருந்து மீள்விக்கப்பட்டது