உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


96  உறவினால் அழிவதை உயர்வெனக் கருதுவேன்!

தமிழரே என்றனைத் தாழ்த்தினும் வீழ்த்தினும்
தமிழருக் குழைப்பதே என்பெரு வேலையாம்!
உமிழாத கொள்கையேன்; பகைவரால் அன்றி, என்
உறவினால் அழிவதை உயர்வெனக் கருதுவேன்!
அமிழாத நந்தமிழ் அன்றைய பெருநிலை
அடைந்திடப் போரிடும் அயர்விலாப் பணிக்கிடைச்
சிமிழா என் விழிகளும் தோள்களும் கால்களும்
செயலிழந் தயர்ந்தன என்பதென் சிறப்புமாம்!

சொல்லெடுத் திழிக்கினும் சோர்விலாச் செவியொடும்
சுழலிடைத் தள்ளினும் மயல்படா விழியொடும்
கல்லெடுத் தெற்றினும் வீழ்வுறா மெய்யொடும்
காலெடுத் துதைப்பினும் கலக்கமில் நெஞ்சொடும்
வல்லெடுத் துணர்வொடும் வண்டமிழ் வாழ்ந்திட
வல்லமைக் களிறென நடையிடும் போதிலே
புல்லெடுத் தெறிந்துயர் போக்கைத் தடுப்பவர்
புன்செயல் என்செயும் என்றனைப் புறத்திலே!

நோய்மிக முற்றியே நொடிந்திடும் ஒருவரை
நுண்ணுணர் வால், பரிந் துள்ளுயிர் ஒளிபெறத்
தாயெனப் பேணிடப் புகுந்தநல் மருத்துவர்
தந்நலம், தந்துயர் கருதிடில் தக்கரோ?
தாய்மொழி தம்மினம் தம்நிலம் யாவையும்
தாழ்த்தியும் வீழ்த்தியும் தம்மையும் இழக்குமிந்
நோய்மிகு தமிழரை நொடிதொறும் எண்ணிடும்
நோயினும் பிறிதொரு நோய் எனை வருத்துமோ?

தம்மையே நலப்படுத் தும் ஒரு நோக்கிலே
தமிழையும் நலப்படுத் திடுவதாய்ச் சொல்பவர்
எம்மையிங் கிழிப்பதும் அடிக்குழி பறிப்பதும்
இரங்கிடத் தக்கது! மிகஇழி வானது!
செம்மைசேர் உள்ளமும் செயலுற ஊக்கமும்
சிதர்வுறா மெய்யறி வூற்றமும் மிக்க, என்
வெம்மைதோய் உணர்வினை என்செய முடிந்திடும்?
வீணருக் கிரங்கிடு வீர், கவல் நண்பரீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/192&oldid=1424802" இலிருந்து மீள்விக்கப்பட்டது