பக்கம்:கனிச்சாறு 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨க


63. பெரியார் ஈ.வே.இரா. நடத்திய கருவறைப் போராட்டத்தின்பொழுது பாடியது இது.

64. அலங்கோல எழுத்தாளர்களும் வீணுரை மேடைப் பேச்சாளர்களும் தமிழகத்தில் நிறைந்துவிட்டனர். அவருள் உண்மையானவர்களைக் காண்பதரிது. ஏக்கம் ஊடுருவி நிற்கிறது.

65. பொய் எவ்வளவில் ஆரவாரம்கொண்டு அரசோச்சினாலும் அஃது அழியவே அழியும் என்றும், மெய் எவ்வளவில் அமைவாக இருந்தாலும் அது வாழவே வாழும் என்றும் இப்பாடலில் உணர்த்தப் பெறுகிறது.

66. காலம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. தமிழர்கள் இலக்கிய ஆட்சியிலும் பிற உரைநூல்கள் எழுதுவதிலும் மிகவும் பின்தங்கிக் கிடக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்க ஒரு பாட்டு.

67. நாட்டில்தாம் எத்துணைக் கயமை நிலைகள், ஏமாற்றுப் பேச்சுகள், குலச் சமயப் பூசல்கள்? வாழ்வுநிலை உயர்வடைதல் என்றோ?

68. அயல்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இந்நாட்டிலிருக்கும் இழிவு நிலைகளைக் கூறி, அவர்களாவது தமிழ்மொழியையும் தமிழ் இன நலத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் காத்துக் கொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது இப்பாடல். சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த ‘உரிமை முழக்கம்’ என்னும் தாளிகையில் வெளிவந்தது.

69. வெறும் வியப்புக் குறிகளையும் கேள்விக் குறிகளையும் தலைப்பாகக் கொண்ட பாட்டு இது. தமிழகத்தில் காணப்படும் நேர் முரணான சில நிலைகளை எடுத்துக் கூறி வியப்பும், இனி என்ன ஆகுமோ என்று வினாவும் எழுப்புகிற வகையில் அமைந்த பாடல்.

70. தமிழகம் ஒருநாள் கட்டாயம் தனித்தமிழரசை அமைத்தே தீரும்; அதற்குரிய முரசொலிப்பு இது.

71. ஏழு கோடித் தமிழர்களிடையே எண்பதுகோடிப் போக்குகள் இருக்கின்றன. அனைவரும் அறிஞர்கள் என்கின்றனர்; தங்களைத் தலைவர்கள் என்று கூறிப் பெருமிதப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுள் யார்தாம் தொண்டர்களோ தெரியவில்லை. இதை விளக்குகின்றது இப்பாட்டு.

72. 1972இல் நடந்த பொதுத்தேர்தலில் அக்கால் தமிழர் நலன்கருதி அருட்செல்வர்(கருணாநிதி) ஆட்சியைக் காக்குமாறு எழுதிய பாடல் இது.

73. தமிழ் இனத்திற்கு நீண்ட வேண்டுகோள். இக்காலத் தமிழர்களிடையே ஏற்பட்ட பலவகைச் சறுக்கல்களையும் இழிவுகளையும் எடுத்துக்கூறி அவர்கள் மொழி நலத்தை முதலாவதாகக் கருதுதல் வேண்டும், அப்பொழுதுதான் மொழிவழி இனமும், இனவழி நாடும் முழுவுரிமை பெற்று உய்யமுடியும் என்று உணர்த்துகிறது இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/22&oldid=1437283" இலிருந்து மீள்விக்கப்பட்டது