பக்கம்:கனிச்சாறு 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


விடுதலை மீட்குநாள் விழவுநாள் ஆகும்!
வீழ்ந்தவர் எழும்நாளே வெற்றிநாள் ஆகும்!
கெடுதலை எங்ஙனோ வந்துற்ற தெமக்கு!
கிளராமல் இருந்தோமால் கீழ்மையே நமக்கு!
இடுதலும் ஏற்றலும் உரிமையிலே இல்லை!
எடுத்தலும் பறித்தலும் விடுதலை எல்லை!
தொடுதலும் தவிர்கநம் தோழியர் தோளே!
தொல்பகை வீழ்வன்றோ நம்விழா நாளே!

-1986


137

உண்மையினை உணருவீரே !


மக்களுடை எழுச்சியெலாம்
வன்முறையென் றடக்குவதால்
மக்களர சென்பதனின்
மதிப்பென்னாகும்?

தக்க முறை நடவடிக்கை
எடுக்காமல், சட்டமுறை -
படைமுறையைப் பயன்படுத்தின்
தகைவென் னாகும்?

பக்கவிளை வெண்ணாமல்
எதிர்விளைவும் பாராமல்,
பலவாறாய் ஒதுக்கிவிடப்
பதைப்ப தென்ன?

ஒக்கநலம் பேணுகின்ற
முறையன்றோ ஒத்தமுறை!
உண்மையினை எண்ணிப்பார்த்
துணரு வீரே!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/244&oldid=1437447" இலிருந்து மீள்விக்கப்பட்டது