உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  217


146

புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்!


முழங்கி முழங்கி முரசு கிழிந்தது!
மூடரின் நெஞ்சோ முன்பே கிழிந்தது!
வழங்கு சொற்களைச் செவிகள் வாங்கில!
வழிவழி மரபுகள் வறட்சி கொண்டன!
பழங்குட் டைகளில் படிந்த பாசிகள்
பாழும் சாதி, மதங்களாய்ப் படர்ந்தன!
எழுங்கதிர் எழுந்த படியே இருக்குமோ?
எழுந்து பகைவரை எரித்துப் பொசுக்குமோ?

திரவிட முரசொலி தமிழாய் முழங்குக!
தேயாத உணர்வினால் இனநலம் வழங்குக!
கருவிடக் குழந்தைக்கு நாட்டுணர் வூட்டுக!
கருதுதல், பேசுதல், எழுதுதல், செய்தலாம்
வருவுணர் வனைத்திலும் விடுதலை வித்துக!
வாய்த்திடின் புரட்சியைக் குருதியில் மலர்த்துக!
ஒருநிலை வரும்; அதற் கொருநாள் ஒதுக்குக!
உரிமைக் கிளர்ச்சியை மக்களால் ஓச்சுக!

கொட்டும் புதுமுரசு இனவொலி எழுப்பட்டும்!
கொள்கை முழங்கித் தமிழர(சு) அமைக்கட்டும்!
முட்டும் பகையினை மோதி முறித்து, இம்
முத்தமிழ்ப் பேரினம் முழுஉரி மைபெற்றே,
எட்டும் கொடுமுடி தமிழினம் எய்தட்டும்!
ஏற்றமும் மாற்றமும் புத்துயிர்ப் பாகட்டும்!
நெட்டும் குறுக்குமாய் உலகில் பரவிய
நேற்றைய தமிழினம் இனிஒன்று சேர்கவே!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/253&oldid=1437462" இலிருந்து மீள்விக்கப்பட்டது