பக்கம்:கனிச்சாறு 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


171

கதைக்கின்றோம் – நலம் சிதைக்கின்றோம்!


ஆளுக்கொரு வண்ணக் கொடி!
நாளுக்கொரு புத்தியக்கம்!
தோளுக்கொரு நீளத்துண்டு - எனத்
தேளுக்கதி காரம் பெற
அலைகின்றோம் - சீர்
குலைகின்றோம்!

கூட்டத்திற்கோர் மேடை கட்டி
ஈட்டத்திற்கோர் உண்டில் ஏந்தி
ஆட்டத்திற்கோர் நடிகை காட்டி - மன
நாட்டமெல்லாம் பொருள் மேல் வைத்துப்
பொய்க்கின்றோம் - கரவு
வைக்கின்றோம்!

எதுகைமோனை அடுக்குச் சொற்கள்
முதுமைத் தமிழில் பேசக் கற்று
மதுவை ஊனைக் கிறக்க உண்டு - பெரும்
புதுமை நலன்கள் வளங்கட் காக
நடிக்கின்றோம் - காசு
அடிக்கின்றோம்!

மடமைச் சாதி மதத்தில் வீழ்ந்து
வடவர் பார்ப்பார் வஞ்சம் ஆழ்ந்து
உடைமை பெருக்க உண்மை தவிர்த்து - இனக்
கடமை உணராக் கழுதைகளாகிக்
கதைக்கின்றோம் - நலம்
சிதைக்கின்றோம்!

-1995
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/286&oldid=1520916" இலிருந்து மீள்விக்கப்பட்டது