பக்கம்:கனிச்சாறு 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

கொள்ளை யிடுவார் ஒருபுறத்தே!
கத்திக் களைப்போன் என்குரலுன்
காதுப் பறையைக் கிழிக்கிலையோ?
கள்ளுண் பித்தன் எனவாகிக்
கடுமைத் துயிலுங் கொண்டாய்நீ!
தித்துப் பதுவோ, வல்லடிமை?
தென்னா! எழுக எழுகவே!
தேடாப் பூட்கை மிகக்கொண்ட
திறலாய் எழுக, எழுகவே! -7

பேச்சுந் தடுத்தார்! நீமணந்த
பிறங்கும் புகழைப் பொய்யென்றார்!
பிழையா அரசில் நீவாழ்ந்த
பெருவர லாற்றைக் கதையென்றார்!
மூச்சுந் தடுப்பார்! உன்னினத்தை
முழுதும் அழிப்பார்! தமிழா,வென்
முழக்கம் நின்றன் முழுச்செவிட்டு
மூளிச் செவியுட் புகவிலையோ?
ஓச்சுங் கைவாள் உடனெடுப்பாய்!
உறைந்த குருதிக்(கு) அனல்காய்வாய்!
உண்டால் உரிமை! அதுவல்லால்
உலையாச் சாவை உடனழைப்பாய்!
ஏச்சுங் கேட்டே உறங்குதியே!
இளமைத் தமிழா எழுகவே!
இறவாப் புகழுக் கிலக்கான
ஏறே! எழுக, எழுகவே! -8

கோட்டுக் களிற்றை முகத்தடக்கிக்
கொடுவாய்ப் புலிக்குப் பல்லெடுத்துக்
குவடுங் காவும் மிதித்தெழுந்த
குலமும் புலமும் நினதன்றே!
காட்டுக் குறத்தி மலைமுகட்டைக்
கயிற்றால் தாவி அடைதேறல்
கையாற் பிழிந்து மகற்களிக்கும்
கதையும் வழக்கும் நினதன்றே!
வேட்டுக் குழற்கே அஞ்சுவதோ?
வெற்பா, மலையா, குறவா, உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/58&oldid=1424655" இலிருந்து மீள்விக்கப்பட்டது