பக்கம்:கனிச்சாறு 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


31  துன்பம் தொடர்க!

“பாட்டெழுதிக் கைசோர்ந்தோம்;
பண்ணிசைத்து வாய்வலித்தோம்!
ஏட்டில் பலவாறாய் எழுதி முழக்கமிட்டோம்!
கால் நடையாய்ச் சென்று
மணிக்கணக்காய்க் கண்விழித்து
நால்வகையா நம்மவர்க்கே வந்த நலிவெல்லாம்
ஒக்க எடுத்துரைத்தோம்! ஓங்கு மறஞ்சொன்னோம்!
தக்கவே நல்வினைகள் தாழா திவண்புரிந்தோம்!
மேலைத் திருநாட்டின் மேன்மையுறு நற்கலைகள்,
வேலைத் திறங்கள், அறிவாம் வியன் நூற்கள்,
சான்றோர் வரலாற்றுச் சாகா நறுஞ்செயல்கள்,
ஆன்ற அறமொழிகள் முற்றும் அழகுறவே 10
செந்தமிழிற் செய்து தமிழர் சிறப்பெய்தத்
தந்து பயன்விளையும் தக்கநிலை காத்திருந்தோம்!

அம்மாவோ! ஈங்கிவற்றால் ஆனபயன் ஒன்றுமில்லை!
இம்மியள வேனும், ஓர் எள்ளின்மூக் கத்துணையும்
எந்தமிழர் முன்னேற்றம் எய்தவில்லை என்றறிந்து
நொந்த உளத்தோடும் நொய்ந்த உறுதியொடும்
சாகாமற் சாகின்ற மெய்யோடும் சாய்ந்து விட்டோம்!
வேகாமல் வெந்து மனம்வெம்பி வீழ்ந்துவிட்டோம்!

இன்சொல்லாற் சொன்னோம்!
எரிச்சலொடும் கூறியுள்ளோம்!
புன்சொல்லும் வீசினோம்!
புண்படவும் சொல்லிவிட்டோம்! 20
என்னவகை சொன்னாலும் எந்தமிழர் மண்ணுடலில்
சின்னதொரு நல்லுணர்வும்
சேர்ந்தபுது மாற்றமொன்றும்
இன்னும் முளைக்கவில்லை; என்றறிந்து யாமயர்ந்தோம்!
மின்னலதும் காணோம்! இடியிடிப்பும் மேற்காணோம்!
கால மழைபார்த்துக்
காத்திருந்து சோர்ந்துவிட்டோம்!
கோல விளைவுக்குக் கூம்பியிருந் தோய்ந்துவிட்டோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/86&oldid=1424739" இலிருந்து மீள்விக்கப்பட்டது