பக்கம்:கனிச்சாறு 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  61


38  பழிபறித் துண்பார்.....!


கையடி காட்டிக் கரவடி எண்ணிக்
கருத்தழியப்
பொய்நிழ லாட்டிப் புரையுரை கூறிப்
புழுவயிற்றுப்
பைநிறை வாகப் பழிபறித் துண்பார்
பகட்டிலெல்லாம்
மெய்நிறை காணார் உளநலம் முற்றும்
மிளிர்ந்தவரே!

-1965


39  தமிழா, ஒன்று செய்!


ஆரியர்க்குப் பாய்விரித்தாய்! ஆங்கிலர்க்குக் கற்பிழந்தாய்!
பூரியர்செய் இந்திக்குப் பொற்பிழந்தாய்! - யார்யார்க்குத்
தாள் பிடிக்கக் காத்திருக்கின் றாயோ தமிழ்மகனே,
வாள் பிடிக்குங் கையால் வணங்கியே! - கேளினிமேல்
மீசை மழித்துவிடு; முன்குடுமி வைத்துக்கொள்!
காசைப் பெரிதாய்க் கருத்தில்வை; - கூசுகிலா
மானம் அறக்கழற்று! மாண்பை உதறியெறி!
ஏனோ உனக்கு மனைவி மக்கள்? - ஊனுடலை
நன்றாய் வளர்ப்பதுவே நல்வாழ்க்கை! - நாள் முழுதும்
தின்று கொழுத்துத் திரி!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/97&oldid=1424710" இலிருந்து மீள்விக்கப்பட்டது