உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

19


இருக்காதா?” என்றான் வைத்தியன். “இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே. எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும்” என்றான் பரந்தாமன். “ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக்கொண்டார். பார்வதி பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி – விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா, சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா, அவர்கள் பேரைச் சொல்லிக்கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம்” என்று வைத்தியன் சொன்னான்.

பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கும் மேலே பேச்சு பொங்கிற்று. உள்ளேயும் “அது“ பொங்கிற்று!

“கேளப்பா கேளு இந்த மாதிரி “ஜோடி“ சேர்ந்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்பபிள்ளைக்குப் பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சு போட்டுவிட்டாள். பணமா பெரிசு! நல்ல ஒய்யாரமான குட்டி ராதா. அவளை ஓர் ஒடிந்து விழுந்து போகிற கிழவனுக்குப் பெண்டாக்கினால் அந்தக் குடும்பம் எப்படியாவது? உனக்குத் தெரியாது விஷயம். மாரியப்பபிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காகத்தான் இருப்பாரு. ஆனால், இந்த “பொம்பளை“ விஷயமென்றால் நாக்கிலே தண்ணி சொட்டும் அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம், ரொம்ப சபலம். எப்படியோ பார்த்து போட்டுட்டான் சரியான பெண்ணை, தன் வலையிலே” என்றான் வைத்தியன்.

பரந்தாமன் பார்த்தான் மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது. வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்துவிட்டது. நேரமாயிற்று மருந்துகொடு வைத்தியரே, போகிறேன் என்று கேட்டான். வைத்தியர்,