பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

69


“இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே, இந்தப் பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விடமாட்டேன்” என்று கிழவன் கொஞ்சுமொழி கூறிக்கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த சாராதவை நோக்கிச் சிரித்தான்.

“ஆலமர முறங்கக் குட்டி அடிமரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க, குட்டி என்ன வரம் பெற்றேனோடி” என்று பாடத் தொடங்கினான். சாராத, தனக்கு தூக்கம் வருவதாக்க் கூறினாள். பார்க்கலாமா யார் முதலில் தூங்குவது என்று பந்தயங் கட்டினான், கணவன்.

இரண்டொரு வினாடிகளில் சாரதா குரட்டை விட்டாள். அது வெறும் பாசாங்கு. கிழவன், அவள் பாசாங்கு செய்வதைக் கண்டுகொண்டான். அவளுடைய காதில் சிறிய துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்து விட்டாள்!

“என்னை ஏமாற்ற முடியுமோடி குட்டி, என்னிடம் சாயுமோடி” என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டை விட்டான் பாசாங்கு அல்ல! நிஜம். பாலில் கலந்திருந்த அபின் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. ராதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள், எழுந்திருக்கவில்லை. பிறகு, அவள் படுக்கையைவிட்டு எழுந்து, பெரிய பச்சை சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டு புறக்கடை கதவைத் திறந்துகொண்டு, கழனிப் பக்கம் நடந்தாள். இருட்டு. தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேறும் நீரும் கலந்த வழி. தொலைதூரத்தில் நரியின் ஊளை. ஆங்காங்கு, வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை, மர உச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. ராதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால் பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும்