பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் தமிழும் 593 குறிப்பிடுவதைக் காண்கிறோம். தமிழ்த் தென்றல் குழுமையானது, இனிமையானது. இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிப் பம்பைக் கரையை அடைந்தனர். பம்பையின் சிறப்பைக் கம்பன் கூறுகிறார். அதில், “ஆரியம் முதலிய பதினெண் பாடையின் பூரியர் ஒரு வழிப் புகுந்ததாம் என” என்று குறிப்பிடுகிறார். கம்பனும் தன் காலத்தில் பாரதத்தில் இருந்த பதினெட்டு பாரத மொழிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தப் பல மொழிகள் பேசும் மக்களின் ஒற்றுமையைக் குறிப்பிடுகிறார். பம்பைப் பொய்கைப் பகுதி மிகவும் அழகுள்ள இடமாகும். இராமனும் இலக்குவனும் அங்கு தங்கியிருந்த போது இராமன் சீதையின் நினைவால் வருந்துகிறான். புலம்புகிறான். அந்தப் புலம்பலிலும் கூடக் கம்பன் தமிழையும் தமிழ்ப் பாட்டையும் குறிப்பிடும் அழகு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. “பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லிப் பொலிந்த பொலந்தாது தன்பால் தழுவும் குழல் வண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே! என்பால் இல்லை, அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்புடைய உன்பால் இல்லை, என்றக் கால் ஒளிப்பா ரோடும் உறவுண்டோ?” என்று இராமன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு தமிழ்ப் பாட்டு என்னும் சொல்லுக்கு இனிமையான பாட்டு என்றும் பொருள் கொள்ளலாம். சீதையைத் தேடும் படி சுக்கிரீவன் தன் படைகளுக்கு ஆணையிடுகிறான். மாருதி, அங்கதன், சாம்பவன் முதலியோரைத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு கூறுகிறான். அவ்வாறு தெற்கு நோக்கிச் செல்லும் போது முதலில் அருந்ததி மலையைக் காண்பீர்கள்.