பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

நடுவே தன் இயற்கை நிறத்துடன் வாழ்வது இயலாது என்று கருதி, கருநிறங் கொண்டு வந்தது போல இருந்தானாம் அந்த விபீடணன்.

***

பளிக்கு வேதிகை - பளிங்குக் கற்களால் ஆன மேடை மீது; பவழத்தின் கூடத்து - பவழ மயமான மண்டபத்துள்; பசும் தேன் துளிக்கும் - புதிய தேன் துளிர்த்துக் கொண்டிருக்கும்; (மலர்களை உடைய) கற்பகப் பந்தரில் - கற்பக விதானத்தின் கீழ்; கரு நிறத்தோர் பால் - கருநிறங் கொண்ட அரக்கரிடையே; வெளுத்து வைகுதல் அரிது என - வெண்மை நிறத்துடன் வாழ்தல் அரிது என்று எண்ணி; அவர் உரு மேவி - அவ்வரக்கரின் கரிய உருக் கொண்டு; ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை - தன்னை மறைத்துக் கொண்டு வாழ்கின்ற தரும தேவதையை ஒத்த விபீஷணனை: உற்றான் - அடைந்தான்.

***

உற்று நின்று அவன் உணர்வைத்
        தன் உணர்வினால் உணர்ந்தான்
குற்ற மில்லதோர் குணத்தினன்
        இவன் எனக் கொண்டான்
செற்ற நீங்கிய மனத்தினன்
        ஒருதிசை சென்றான்
பொற்ற மாடங்கள் கோடியோர்
        நொடியிடைப் புக்கான்.

விபீடணன் அருகே சென்றான்; நின்றான்; அவன் உணர்வதைத் தன் கூர்மதியினால் உய்த்து உணர்ந்தான் குற்றமில்லாத குணத்தவன் இவன் என்று கண்டான். பகையில்லாத நெஞ்சினனாய் பிறிதொருபால் சென்று மலையொதத மாளிகைகளிடையே புகுந்தான்.