பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

தம்பி விபீடணனின் முகமும், பேச்சும் உறுதி செய்யும். சுக்ரீவன் தன் அண்ணன் வாலி, தன்னிடமிருந்து கைப்பற்றிய தனது அரசை, மீண்டும் பெறவே தங்களிடம் வந்தான். விபீடணனோ அப்படி அல்ல, இலங்கேசனால் துரத்தப்பட்டு தங்களிடம் புகலிடம் கேட்டு வந்துளான். அவன் தக்க சமயத்திலேதான் வந்துள்ளான். விபீடணன் இராமனை நாடியதேன்? இராமன் சத்தியத்தின் உரு; கருணையின் வடிவம்; என்ற உண்மையை உணர்ந்தே இராமனை நாடினான். சீதையைக் கவர்ந்த நாள் முதல் இலங்காதிபனைத் திருத்த அவன் எடுத்த முயற்சிகள் எத்தனை, எத்தனை! ‘சரண்’ என வந்த அவனையும், அவனுடன் துணை வந்தவரையும் சந்தேகிக்கலாமோ? அரக்கராகப் பிறந்து விட்டதால், அவர் நமக்கு எப்போதும் மாயமே செய்வரென்று கொள்வது முறையாகுமா? தீங்கு தான் செய்வான் விபீடணன் என்று நினைத்தால், என்னை இராவணன் கொல்வதை, ‘தூதுவரை கொல்லுதல் குற்றமாகும்’ என எடுத்துக் கூறி, காப்பாற்றியிருப்பானா? அரக்கர், விபீடணன் மாளிகையைச் சுற்றி பழிக்கக் கூடிய செயல்களைச் செய்தனர் என்றாலும் அவர் தம் தீயச் செயல்களை விபீடணன் மேற்கொள்ளாதது அவனுடைய நற்குணத்திற்குச் சான்று அன்றோ? அது மட்டுமா? விபீடணனின் ஒப்பற்ற மகள், திரிசடை அன்றோ பிராட்டியாருக்கு ஆறுதல் கூறி, அவர் உயிருடன் இருக்க உதவியவள்!

தான் கண்ட கனவைக் கூறி, அரக்கியர் அன்னையை துன்புறுத்தாவண்ணம் பாதுகாத்தவள் இங்கு, இன்று, வந்துள்ள விபீடணனின் மகள்தானே? அயனால் இராவணன் பெற்ற சாபத்தை அன்னைக்குக் கூறியவளும் அவளே அல்லவா?

***

கி,—16