பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பரம்பரைகள்

27



னாள். அந்தப் படபடப்பைக் கண்டு தனபாலச் செட்டியார் ஆச்சரியப்படவில்லை தேவாவுக்குத்தான் ஆச்சரியம் பிறந்தது, அவர் அதற்கு அளித்த மறுமொழி கேட்டு. "முட்டாள் பெண்ணே! மூன்றாவது குட்டி இருந்தால், அந்த விடியாமூஞ்சிக்குத் தருவேன் என்றல்ல நான் சொன்னதற்கு அர்த்தம், மூல்தானி இருக்கிறானே, நமக்கு கேட்கும்போது கடன் தருகிறானே, அவனுக்குக் கொடுத்திருப்பேன். நமது வீட்டு நாய்க்குட்டி, ஒன்று கலெக்டர் பங்களாவிலும், மற்றொன்று இன்கம்டாக்ஸ் ஆபீசர் வீட்டிலும் உலாவினால், எவ்வளவு இலாபம் தெரியுமோ நமக்கு. ஏது சார் நாய்க்குட்டி என்று யாராவது கேட்கிறபோதெல்லாம், டிட்டிக் கலெக்டரும், ஆபீசரும் "இதுவா, தனபாலச் செட்டியார் தந்தார்" என்று கூறுவார்களே! எத்துனை முறை என் பெயரை உச்சரிப்பார்கள். என்னைப் பற்றி பெரிய ஆபீசர்கள் பேசினால் ஊரிலே எனக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும். தபைாலச் செட்டியாருக்கும் கலெக்டருக்கும் பிராண சிநேகிதம், கலெக்டர் வீட்டிலே இருக்கிற நாய்க்குட்டி கூட, செட்டியார் கொடுத்ததுதான் என்று பெரிய மனிதர்களெல்லாம் பேசுவார்கள். இந்த நாய்க்குட்டிகள், நமது 'ஏஜண்டுகள்' போல அல்லவா, அங்கே இருக்கும். இது தெரியாமல் சுகானந்தத்துக்குக் கொடு என்று பேசுகிறாயே. பைத்தியமே! அவன், இந்த நாய்க்குட்டி தரவில்லையே என்று கொஞ்சம் கோபித்துக் கொள்வான், அதனாலே நஷ்டம் என்ன? கலெக்டர் வீட்டிலும், ஆபீசர் வீட்டிலும் இந்தக்குட்டிகள் போய்ச் சேருவதால் வருகிற இலாபம் எவ்வளவு! அதைக் கவனிக்க வேண்டும். வியாபாரியின் பெண்தான் இருந்து என்ன பயன்? சூஷ்மபுத்தி இல்லையே உனக்கு" என்று செட்டியார் உபதேசமே செய்துவிட்டார். தேவா தெளிவு பெற்றாள், தகப்பனார் காட்டிய வழி சரி என்றல்ல, அவர் ஓர் பணம்திரட்டும் கருவி என்ற தெளிவு பெற்றாள். ஏழையும் செல்வவானும் இணைபிரியா நண்பர்களாக இருப்பினும், இளமை முதலே பிராண சிநேகிதர்களாக இருந்தாலும் இருவர் உலகமும் வேறு வேறு, எண்ணம், ஏற்பாடு,