பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

87


பாய்ந்து செல்வது சூரியன் தன் மனைவியாகிய சாயாதேவியின் பிரிவைப் பொறாமல் அவளைப் பல இடங்களிலும் தேடித் திரிவதாகக் கவிஞர் தான் கருதிய வேறொன்றினை ஏற்றிச் சொல்லும் திறம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க முடியாமல் பருந்துக்கள் பறந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது பூமியின் மீது படும் அதன் நிழல் ஓடுவது போலிருக்கும். இது இயல்பாக நாம் காணும் காட்சி. இதனைக் கவிஞர் கூறும் பொழுது பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க முடியாது நிழல்கள் ஓடுகின்றன என்றும், அந்நிலத்தில் நிற்கும் நிழலையே காண்பது அரிது என்றும் தன் கருத்தை ஏற்றிப் புனைந்து கூறுவது இன்பம் பயக்கின்றது.

ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல்
அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
டோடு கின்றநிழல் ஒக்கு நிற்குநிழல்
ஓரி டத்துமுள வல்லவே.[1]

[ஆடுகின்ற-அசைகின்ற; சிறை-சிறகு]

என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். பாலை நிலத்திலுள்ள மரங்களில் நிழலே இருப்பதில்லை; தழையிருந்தால் தானே நிழல் இருப்பதற்கு ? இதில் கவிஞர் தன் கருத்தினை ஏற்றிப் புனைந்து கூறும் திறம் படிப்போருக்குக் களிப்பினை நல்குகிறது.

ஆத வம்பருகு மென்று நின்றநிழல்
அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன
பருகு நம்மையென வெருவியே.[2]

[ஆதவம்-வெயில்;பாதவம்-மரம்,உணங்குவன-உலர்வன]


  1. தாழிசை-80
  2. தாழிசை-81