பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கலைக் களஞ்சியம்


இப்சென், ஹென்ரிக் (Ibsen, Henrik 1828-1906) நார்வே நாட்டவர். இளமையில் வறிஞராயிருந்தமையால் மருந்துக்கடையில் வேலை பார்த்தார். அது இவருக்குப் பிடிக்காததால் அந்த வேதனையைக் கவிதை புனைந்து ஆற்றிக்கொண்டு வந்தார். இருபத்து மூன்றாவது வயதில் நாடகக் கவிதை புனைந்து தரும் வேலை பெற்றார். நார்வே நாட்டு அரசியல் போக்கில் வெறுப்புக்கொண்டு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் வாழ்ந்து வந்தார். இவர் முதலில் 25 ஆண்டுக்காலம் வரலாற்று நாடகங்களும், அதன்பின்னர் சமூக நாடகங்களும் இயற்றினார். இவர் 1863-ல் இயற்றிய காதல் நாடகம் (Love's Comedy) என்னும் நாடகமே இவருக்கு முதன்முதல் புகழ் தேடித் தந்ததாகும்.

உரைநடையில் எழுதிய இவருடைய சமூக நாடகங்களே இவருக்குப் பெரும் புகழ் அளித்தன. இவரை நவீன கால நாடகத்தின் தந்தை என்று கூறுவர். இவர் வாழ்க்கையில் காண்பதை மறைக்காமல் கூறும் வழக்கத்தை வளர்த்து வந்தார். இவருடைய நாடகப் பாத்திரங்கள் உண்மையில் நம்மோடு வாழ்பவரே எனத் தோற்றுவர். இப்செனே சமூகப் பிரச்சினைகளைப்பற்றி ஐரோப்பாவில் முதன் முதல் நாடகங்கள் இயற்றியவர். இவருடைய பொம்மையின் வீடு (Doll's House) என்னும் நாடகம் மணத்தைப் பற்றியதாயும், ஆவிகள் (Ghosts) என்னும் நாடகம் கிரந்திநோயைப் பற்றியதாயுமுள. இவரைப் பின்பற்றியவர்களுள் சிறந்தவர்கள் ரஷ்ய ஆசிரியர் ஆன்டான் ஷெக்காவ் என்பவரும், ஆங்கில ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா என்பவருமாவர். இவர் சமூகப் பிரச்சினைகளைத் துணிவுடன் எழுப்பியது சமூக முன்னேற்றத்துக்கு அடிகோலியது என்று கூறுவர். உண்மையே சமூக உறவுகளுக்கு அடிநிலையாக இருக்கவேண்டும் என்று இவர் வற்புறுத்தியது இவர் செய்த சேவைகளுள் சிறந்ததாகும். இப்செனுடைய நாடகங்கள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள.

இப்ராஹீம் லோடி (ஆ.கா. 1517-1526) சிக்கந்தர் லோடியின் மூத்த மகனான இவர் தம் தந்தைக்குப்பின் டெல்லி சுல்தானானார். இவர் தம் பிரபுக்களோடு பல தகராறுகளை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தம்பியான ஜலால் கலகம் செய்ததால் இப்ராஹீமால் கொல்லப்பட்டார். இவர் மேவார்மீது படையெடுத்து வெற்றிகொண்டதாக முஸ்லிம் வரலாறு கூறுவது ராஜபுத்திர வரலாற்றால் மறுக்கப்படுகிறது. இவர் இராணாசங்காவால் தோற்கடிக்கப்பட்டார் என்று அவர்கள் வரலாறு கூறுகிறது. இவர் காலத்தில் பீகார் சுதந்திரம் அடைந்தது. லாகூரில் கவர்னராயிருந்த தௌலத்கான் லோடி, பாபரை வரவழைத்து இந்தியாமீது படையெடுக்கும்படி தூண்டினார். 1526-ல் பானிப்பட்டில் நடந்த போரில் பாபரால் இப்ராஹீம் லோடி தோற்கடிக்கப்பட்டார். இவரோடு லோடி வமிசம் முடிவுற்றது. இவர் காலத்தில் தானியங்கள் மிகுதியாகவும் குறைந்த விலைக்கும் மக்களுக்குக் கிடைத்து வந்தது குடிகளுக்கு நன்மையாக இருந்தது.

இபன் கால்தூன் (1332–1406) ஒரு பெரியஅராபிய வரலாற்றாசிரியர்; சமூகத் தத்துவஞானி; அரசியலறிஞர். இவரது பெயர் அபு சையீத் அப்தல் ரஹ்மான் என்பது. எனினும் இபன் கால்தூன் என்றே இவரை அழைப்பது வழக்கம். இவர் அல்கிந்தா என்னும் ஒரு தென் அராபிய வகுப்பிற் பிறந்தவர். இவருடைய முன்னோராகிய காலீத் என்பவர் ஹிஜிரா மூன்றாம்