பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

கட்டுதற்கு நன்கொடை வசூலித்தமையையும் குறிக்கிறது". புகலிவேந்தர் என்பது சம்பந்தர் பெயரை நினைவூட்டும். புகலி -சீகாழி. எனவே ஆலாலசுந்தரர் என்ற பெயர்போற்றப்பட்டமை தெளிவு.

இசை ஞானியார்

இவர் சுந்தரரின் தாய். இவ்வம்மையாரின் பெயரை இரண்டாம் குலோத்துங்க சோழருடைய (1113 - 1150) திருவாரூர் வடமொழிக் கல்வெட்டினின்றறியலாம். 'ஆளுடைய நம்பி மாதாக்கள் இசைஞானியார்' என்ற அப்பகுதி தமிழ் எழுத்துக்களில் உள்ளன.

ஆளுடைய நம்பி மாதாக்கள் இசைஞானியார் ஜனனி பவதோ ஞான சிவாசார்யகுலே பவத்

சைவே கெளதம கோத்ரேஸ்மின் ஞான்யாரவ்யாகமலாபுரீ

என்ற இக்கல்லெழுத்தில் சுந்தரர் ஆளுடைய நம்பி என்று குறிக்கப் பெறுதலும், அவர் தாயார் இசைஞானியார் என்பதும், அவ்வம்மையார் ஞானசிவாசாரியார் என்பவருடைய மகள் என்பதும், சைவ கெளதம கோத்திரத்தில் அவ்வம்மையார் பிறந்தார் என்பதும் அறிதற்பாலனவாம்.

நம்பியாரூரர்

ஆளுடைய நம்பி என்றமைபோல, நம்பி ஆரூரர் என்றும் சுந்தரர் குறிக்கப் பெறுகிறார். இதனை வீரபாண்டிய தேவரது திருநெல்வேலிக் கல்லெழுத்தினின்றும்", இராசராசனது தஞ்சை இராசராசேச்வரத்துக் கல்லெழுத்துகளினின்றும் அறிகிறோம். முதலாம் இராசேந்திரனின் 20ஆம் ஆட்சியாண்டுக் உரிய திருமழபாடிக் கல்வெட்டு நம்பியாரூரனார் படிமத்தைத் திருப்பள்ளித்தாமப்பிச்சன் எழுந்தருளுவித்து நிலமளித்ததாகக் கூறுகிறது".

முதல் இராசராசனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக் கூகூர்க் கோயிலில் சித்திரைத் திருவிழா நடத்த