உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்னை வாழ்வின் தொடக்கம்

139



எனக்கு உரியவரிடம் ஆற்றுப்படுத்தியது. அதனாலேயே ஒருவருக்கு என விளம்பரம் செய்திருந்த போதிலும் மூவர் அதற்கெனத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். திரு. அ. ச. ஞான சம்பந்தர், திரு. க. அன்பழகர், நான் ஆகிய மூவரும் 1944 சூன் இறுதி வாரத்தில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளர்களாகச் சேர்ந்தோம்.

அதே வேளையில் புலவர் அன்பு கணபதி அவர்களும் பயிற்றாளாராகப் பணி ஏற்றார். எங்கள் அனைவரையும் அத்துறைத் தலைவராகிய மோசூர் கந்தசாமிமுதலியார் அவர்கள் அன்புடன் ஏற்றுப் புரந்தநிலையை இன்று நினைத்தாலும் உள்ளமும் உடலும் ஒருசேரச் சிலிர்க்கின்றன, டாக்டர் மு. வரதராசனர், டாக்டர் மொ.அ. துரைஅரங்கனார் போன்ற பெருமக்களோடு கலந்து பணியாற்றும் பொறுப்பினை மேற்கொண்ட நிலையில் இறைவனையும் அன்னையையும் பச்சையப்பரையும் உளத்தால் போற்றி வாழ்த்தினேன். ஏதோ ஒரு வேகம் உந்த, மாற்றுப் பணிக்கென 75-5-125 ரூபாய் ஊதியத்தில் பச்சையப்பரில் நான் கால் வைத்த அந்த நாளில் எனது ஓய்வு நாள் வரையில் தொடர்ந்து இதே கல்லூரியில் பணியாற்றுவேனென்ரறோ, தொடர்ந்து பல வகையில் உயர்ந்து வளர்வேனென்றோ, உலகில் ஒருவகை வாழ்ந்தமைக்கு ஏற்ற சின்னங்களுடன் பணியாற்றுவேனென்றோ, அதே வேளையில் சில கல்வி நிலையங்களை உருவாக்குவேனென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒய்வு பெற நிற்கும் இந்த ஆண்டில், இந்த வாழ்க்கைக் குறிப்பை எழுதும் நிலையில் அந்த நாள் என் முன் ஒளிவிடுகின்றது. ஆம்! 1944ல் பச்சையப்பரில் கால் வைத்த நான் பல வாழ்வின் மேடுபள்ளங்களைக் கண்டு பல்வேறு மக்களொடு பழகி, பல்வேறு அனுபவங்களைப் பெற்று வாழ்ந்து இன்று இந்தக் குறிப்பையும் எழுதுகிறேன்.