உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

காஞ்சி வாழ்க்கை


அவர் பல விளக்கங்கள் தருவார். அவற்றுள் அவர்தம் ஆழ்ந்த இலக்கண இலக்கியப் புலமை நன்கு விளங்கும். அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். எனினும் விடியற்காலை நான்கு மணி அளவில் எழுந்திருந்து நான்கு கல் தூரம் நடந்து, காலை ஆறு மணிக்குள் தம் காலைக்கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு பூசையில் கருத்திருத்துவார். என்னிடம் அவர் காட்டிய பரிவும் பாசமும் மறக்கற்பாலன அல்ல. அவரிடம் நான் கற்றன பல. அவரைப் போன்றே வேறு கற்ற சில துறவியரும் மடத்துக்கு வரும் போதெல்லாம் எனக்கு ஊக்கம் அளிப்பர், ஆகவே நான் மடத்தில் ஒருவனாக-அங்குள்ளார் அன்புக்குப் பாத்திரனான ஏழை மாணவனாக வாழ்ந்து முதலாண்டுக் கல்வியைக் கற்று வந்தேன்.

அப்போது பல்கலைக்கழகத்தே தமிழ் பயிலுவோருக்கு உபகாரச் சம்பளம் தந்துவந்தனர்; முதலாண்டுக்கு 12 (அ) 13 ரூபாய் என நினைக்கிறேன். தமிழை வளர்க்க வேண்டும் என்ற உள்ளத்தாலும் தனித்தமிழ் பயிலுவோர் அக்காலத்தில் அருகிநின்றமையாலும் அண்ணாமலை அரசர் தம் பல்கலைக் கழகத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தனர். முதல்தேதி ஆனால் ஆசிரியர்கள் சம்பளம் வாங்குவது போன்று நாங்களும் இந்த உதவித்தொகையைப் பெறுவோம். மடத்தில் தங்கியகாலத்தில் இந்த உதவித்தொகை பன்னிரண்டில் மாதச்செலவுபோக மிகுதியாவதை என்ன செய்வதென்று எண்ணிய நாட்களும் உள.

என்னைச் சிதம்பரத்துக்கு அனுப்பிய அன்னையாருக்கு இருப்புக்கொள்ளவில்லை; மனம் மகனிடத்திலேயே சென்று கொண்டிருந்தது போலும். நான் வந்து ஒருதிங்கள் கழிந்திருக்கலாம். நான் கல்லூரிக்குச் சென்று ஒருநாள் மாலை மடத்துக்குத் திரும்பிய காலத்தில் வாயிலில் இருந்த அடிகள் என் அன்னை வந்திருப்பதாகவும் அடுத்த மறுகட்டில் பின் புறத்தில் தங்கி இருப்பதாகவும் சொன்னார்கள். நான் உடனே ஓடினேன். அவர்கள் என்னைக் கட்டிக்கொண்டு