பக்கம்:காணிக்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நான் மனைவியிடம் பொய் சொல்ல முடிந்தது. பிஸினஸ் அப்படித் தான் லேட்டாகும் என்று சொல்லி விடுவேன். அவள் நம்பிவிடுவாள்.

இவளிடம் நான் பொய் சொல்ல முடியாமல் போய் விட்டது. முன்னர் கூட நான் எங்கே பொய் சொன்னேன். உண்மையை மறைத்தேன். இரண்டுக்கும் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது.

"அப்படியானால் எப்படி என்னை விரும்புகிறாய்?" என்று கேட்டேன்.

“நீங்கள் அதிகம் படிக்கவில்லை. அதனால் தான் விரும்புகிறேன்" என்றாள்.

என்னை அது அவமானப் படுத்துவது போல் இருந்தது.

"நான் படிக்க வில்லை என்பது உனக்கு எப்படிச் சொல்ல முடியும்?"

"கொஞ்சம் புத்திசாலியாக இருக்கிறீர். அதனால் தான் தெரிந்து கொண்டேன்."

படித்தவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு தவறாக அபிப்பிராயம் வைத்திருந்தாள் எனக்குத் தெரியவில்லை.

"ஏன் அப்படிக் கூறுகிறாய்?"

"நானும் படித்திருக்கிறேன். அதனால் தான் அப்படிச் சொல்கிறேன்" என்றாள்.

"நல்லது தானே?"

"ஆமாம் படிப்பு இன்னது என்று தெரிந்து கொண்டேன். அந்த வகையில் அது நல்லது தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/47&oldid=1325669" இலிருந்து மீள்விக்கப்பட்டது