பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 26


இறைவா, நெஞ்சம் தளராதிருக்க அருள் செய்க!

இறைவா, கற்பகமே! நான் என் பிறப்பின் பயனை அடைய வேண்டாமா? என் வாழ்க்கை பூரணத்துவம் அடைய வேண்டாமா?

இறைவா, எனக்கு என்ன குறை என்றா கேட்கிறாய்? இது என்ன கேள்வி: இப்போது என் கையில் பொருள் இல்லை. இந்தக்காலம் நான் ஒன்றுமே செய்ய இயலாத காலமாக இருக்கிறது. இறைவா, ஏன் காமனைக் கனன்று விழித்த பார்வையோடு என்னை நோக்குகிறாய்? நின் சினம் தாங்கும் ஆற்றல் எனக்கில்லை!

இறைவா, நான் ஏதேனும் தவறு செய்தால் மன்னித்துக் கொள்! என் பொல்லாத காலம் கையில் பொருள் இல்லை என்று வாளா இருந்துவிட்டேன். என்னுடைய செயலின்மையைக் காலத்தின் மீது பழியாகப்போட்டு விட்டு நெஞ்சில் தளர்ச்சியைத் தாங்கி நடைப்பிணமாக வாழ்கின்றேன்.

இறைவா, என் இழிநிலையைச் சுட்டிக்காட்டி உணர்த்தியதற்கு நன்றி! ஆயிரம் ஆயிரம் போற்றிகள்! பொருள் இருப்பதல்லவே. அறிவறிந்த ஆள்வினையால் பொருள் படைக்கப்படுவது. இறைவா, நீ செல்வத்தை, இயற்கை உலகத்தில் மறைத்து வைத்து எனக்குத் தந்தருளி உள்ளனை.

என் உழைப்பின்மூலம் அச்செல்வத்தைத் தேடி எடுத்து வாழச் சொல்கிறாய். நானோ அறிவறிந்த ஆள் வினையில் ஈடுபடுவதில்லை. இறைவா, உண்மை உணர்ந்தேன். எந்தச் சூழ்நிலையிலும் நெஞ்சில் தளரேன். இலமென்றுவாளா உறங்கேன்.

காலத்தின் மீது பழிசுமத்த மாட்டேன். என் உழைப்பின் மூலம்தான் காலம் நிலை பெறுகிறது. புகழ்பெறுகிறது. இறைவா, என் உழைப்பால் நான் பொருள் படைத்தவனாக அருள்செய்க! இறைவா, வாழ்வித்திடு!