பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நவம்பர் 5


என்னைப் புறம்போக விடாது அருள்க இறைவா!


இறைவா, தாம் வளர்த்த மரம் நச்சுமரம் என்றாலும் கொல்லத் தயங்குகின்றனர். இறைவா, என் கருமேனி கழிக்கத் திருவுருவம் கொண்டருளிய கோவே! ஆணவ இருளில் அறிவும், செயலுமிழந்து கிடந்த என்னை, எடுத்தாண்டவனே!


இறைவா, அறியும் கருவிகளையும் செயற் கருவிகளையும் வழங்கி வாழ்க்கையில் ஈடுபடுத்தினை! நுகர்வுக்குப் பொன், பொருள் ஆகியன் தோற்றுவித்துப் போகத்தினையும் வழங்கியருளினை! இந்தப் பெருங் கருணைக்கு ஏது கைம்மாறு?


இறைவா, ஆயினும், நீயே எடுத்து வளர்த்த நினது உடைமையாகிய என்னை, இன்று பாராமுகமாகக் கைவிட்டு விட்டது ஏன்? இது நீதியா? என் நிலை கண்டு இரங்குவார் நின்னருள் பற்றி ஐயங்கொண்டு சிரிக்க மாட்டார்களா?


இறைவா, நின் புகழ் மாசுபடாமல் இருக்க என்னைக் காப்பாற்றுக! என்னைப் புறம்போக விடேல். என்னைத் திருத்தி நெறி நிறுத்துக. இது உன் கடமை. கடமை, பொறுப்பு இவற்றை நிறைவேற்ற வேண்டுமானால் தகுதி முதலியன பார்க்கமாட்டார்கள். நான் பாவியேன்! ஆனால், உன்னைப் பார்க்கத் தடை இல்லை. என் ஆளுடைய ஈசனே! என் வேண்டுகோள் முழுவதையும் நிறைவேற்று!


இறைவா, நீ என்னில் பிரியக்கூடாது. பிரியில் தரியேன். இனி நான் உன்னைப் பிரியேன்! இறைவா பட்ட பாடெல்லாம் போதும். இனி நான் தாங்க இயலாது. புறம்போக விடாது ஆட்கொண்டருள் செய்க!