பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 17


மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டும் இணையற்ற அன்பினை ஏற்றொழுகிட அருள் செய்க!

இறைவா, அம்மை நீ! அப்பன் நீ! ஐயனும் நீ! அன்புடைய மாமனும் மாமியும் நீ! என்றெல்லாம் உறவு முறை காட்டி, உயிர்களிடத்தில் அன்பினாலாய இணக்கத்தை வளர்த்திடத் திருவிளையாடல் செய்தருளும் இறைவன் நீ!

ஆனால், என்னிடத்தில் உறவுப் பண்பு இம்மியும் கால் கொள்ளவில்லையே? இன்று தாய் - மகவு உறவு சீராக இல்லை. தந்தை மகன் உறவு சொல்லவே வேண்டாம். உடன் பிறந்தான் உறவும் பங்காளிக் காய்ச்சலாக மாறிவிட்டது.

இறைவா! இந்த உலகத்தில் பொருளாதாய வாழ்க்கை என்னைப் பாழ்படுத்தி விட்டது. இறைவா, என்னை எடுத்தாள்க. காப்பாற்றுக. மற்றவர்களுக்காக வாழும் அர்ப்பணிப்பு உணர்வினை உவந்தருள் செய்க!

அன்பினாலாய உறவுகளே இந்த உலக வாழ்க்கையின் பயன் எனக்கருதி, வாழ்ந்திடும் பேருள்ளத்தினை வழங்கிடுக. அனைத்துயிரும் சிவனருள் பெறும் பாத்திரங்கள் என்று கருதி அன்பு செய்யும் உள்ளத்தினைத் தா. ஆற்றலினைத் தா.

மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டும் இணையற்ற அன்பினை ஏற்றொழுகிட அருள் செய்க! பிணக்கை நீக்கி உயிர்க்குலத்தை வாழ்வித்திடச் செய்யும் அன்பினை அருள் செய்க!

தியாகப் பெருவாழ்வுக்குரிய அன்பினை அருள்செய்க! அன்பினாலாய உறவில் உலகம் ஒன்றாகிட உவந்தருள் செய்க!