பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

103


செயற் கருவிகள் பொறிகள் இவைகளைத் திறம்பட வளர்த்துப் பாதுகாத்துக்கொள்ளும் அறிவியல் பாங்கு மக்களிடத்தில் வளரவேண்டும். நல்ல உணவு, நறுநீர், தூய்மையான காற்று, வெப்ப தட்பம் நிறைந்த வாழ்விடம் ஆகியன நல்வாழ்வுக்கு ஆதாரங்கள். நல்ல உழைப்பும் ஓய்வும் உறக்கமும் வாழ்வுக்குத் தேவை. இவற்றையெல்லாம் பெற்று மக்கள் வாழ்ந்திட, மக்களிடம் அறிவியல் சென்றாக வேண்டும்.

உடலை இயக்குவது உழைப்பு. உலகை இயக்குவது உழைப்பு. உழைப்பினை ஆள்வினை என்பார் திருவள்ளுவர். “அறிவறிந்த ஆள்வினை” என்பது திருக்குறள் குறைந்த நேரத்தில், குறைந்த சக்தியைச் செலவிட்டு உழைத்து அதிகப் பயன் கொள்வது அறிவறிந்த ஆள்வினையாகும். இன்றைய உலகில் உழைப்பை எளிமைப்படுத்திப் பெரும் பயன் அடையச் செய்யக்கூடிய கருவிகள் பல வந்துள்ளன. கருவிகள் உழைப்பே அறிவியல் யுகத்தின் புரட்சி. நாளும் கருவிகளில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அறிவியல் யுகத்திற்கு ஏற்ற இந்தக் கருவிகளைக் கையாண்டு உழைத்து வாழ மக்களைப் பயிற்றுவிக்கவேண்டும்.

உழைப்பு, மானுடம் கண்ட ஒப்பற்ற பண்பு உழைப்பே உலக வாழ்க்கையின் உயிர்ப்பாக விளங்குகின்றது. உழைப்பும் உற்பத்தி சார்ந்த உழைப்பாக இருப்பது நல்லது “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்றார் திருவள்ளுவர். பொருள் என்பது என்ன? பணமா? இல்லை; இல்லை! பணம் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் உயிர்க்குலம் நுகர்ந்து வாழும் - அதாவது உண்டும் உடுத்தும் அனுபவித்தும் மகிழும் பொருள்களே பொருள்கள். இன்று பொருளின் உண்மையான நிலைமை தெரியாதார் பலர் பண்டங்களைத் தேடாமல் பணத்தையே தேடுகிறார்கள். இன்று நமது நாட்டுச் சமுதாயம் பண மதிப்பீட்டுச் சமுதாயமாகப் போய்விட்டது. அதனால் பணம் பண்ணும் பரிசுச் சீட்டு முதலியனவற்றை