பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

317


'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்'-ஒழுக்கம் என்றார். ஆம். பலவற்றையும் ஒருவன் கற்றிருந்தாலும் கூடப் பத்துப் பேரோடு கூடி வாழத் தெரியாதவன் அறிவில்லாதவனே என்கிறார். பத்து மனிதர்களோடு கூடிவாழத் தெரிந்தாலே அது பெரிய ஒழுக்கம் என்கிறார்.

இந்த நாட்டுச் சராசரி மனிதனுக்கும் சென்று எட்டுகிற அளவில் எளிமையாகவும் மிகச் சுருக்கமாகவும் ஒன்றே முக்காலடியில் வள்ளுவர் திருக்குறளைச் செய்தார். திருக்குறளின் மையம் மனிதகுலம் ஒரே குலம் என்பதுதான். திருவள்ளுவருக்குப்பின் இன்றையச் சூழ்நிலையில் - ஒருவரையொருவர் விழுங்கி ஏப்பமிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தினால் ஒருகுலம்-ஓருலகம் என்று பேசுவதில் என்ன வியப்பு இருக்கிறது? மூட்டைப்பூச்சி மொய்க்கின்ற கட்டிலில் படுத்துக் கொண்டு மூட்டைப் பூச்சிகளின் தொல்லையால் விழித்திருப்பது ஏகாதசி விரதமாகுமா? இன்று ஒருமைப்பாடு ஒரு குலம் பேசுவது அப்படிப்பட்டது தான். வள்ளுவரோ அச்சத்தின் அடிப்படையில், மனிதகுல ஒருமைப்பாட்டைப் பேசவில்லை-அவர் அன்பின் அடிப்படையில், நட்பின் அடிப்படையில் ஒருமைப்பாடு பேசினார். திருவள்ளுவருக்கு முன்பிருந்த நூல்கள் மதத்தைக் கடவுளை - சாதியைக் குறிப்பிடவில்லை. திருவள்ளுவர், தமிழன் என்று கூட இல்லை, உலகை நோக்கியே பேசினார். உலக மனிதனுக்கே பேசினார். -

அன்பின் வழியது உயிர்நிலை-பிறப்பு, ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பன போன்ற விழுமிய கருத்துக்களால் வள்ளுவர் அனைத்துலக மனிதனுக்கே பேசியவராகிறார்.

அன்பு என்றால் என்ன என்ற கேள்வியை நாமே கேட்டுப் பார்ப்போம். அன்புக்கு ஒரு வடிவம் கொடுக்க முடியுமா? வள்ளுவர் அன்புக்கு வடிவம் கொடுத்தார்.