பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறியா வளர்கிறது? சன்மார்க்கமா ஆட்சி செய்கிறது? சைத்தான் மருள் நெறியில் அழைத்துச் செல்கின்றானே! போர்க் கருவிகள் செய்தல் தொழிலாக அல்லவா அமைந்து விட்டது! இரும்பைப் பிடித்த துருவும் சும்மா இருக்காது. ஆயுதம் தொட்டவனும் சும்மா இருக்க மாட்டான். நாளுக்கு நாள் கொலைக் கருவிகள் உற்பத்தி - அதுவும் அணு, இரசாயன் ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பூமியின் காற்று மண்டலம், தண்ணீர் மாசுபடுகிறது. இந்த மாசு பல தலைமுறைகளுக்குப் பாதிப்புச் செய்யும் என்று அறிவியல் உலகம் எச்சரித்திருக்கிறது; எச்சரித்துக் கொண்டிருக்கிறது! பணப்பேயும் அதிகாரப் பிசாசும் பிடித்தாட்டுபவர்களுடைய காதில் இந்த அபயக்குரல் விழவில்லையா? அல்லது விழுந்தும் விழாதது போல நடிக்கிறார்களா?

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உலக மெங்கிலுமுள்ள அனைத்துச் சமய நெறிகளைச் சார்ந்தவர்களும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும். போர் வெறியை, போர் ஆயுதங்கள் தயாரிப்பை எதிர்த்துப் போராட வேண்டும். உலக நாடுகள் பேரவை - ஐக்கிய நாடுகள் சபை ஆற்றல்மிக்குடையதாக அமைய வேண்டும். அது போலவே உலக சமயங்களின் மையம் - சபை ஒன்று தொடங்கப் பெறுதல் வேண்டும். இந்த உலக சமய சபை உலகத்தில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் சமாதானத்தையும் வளர்க்கப் பாடுபட வேண்டும்; உழைக்க வேண்டும். மானுடம் வென்று விளங்க வேண்டும். கணியன் பூங்குன்றன், அருளிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்ற வாக்கு மெய்யாகவே உருப்பெறுதல் வேண்டும். இதுவே அமைதிக்கு வழி!

யாதொரு நிபந்தனையும் இன்றி மானுடம் வளர, வாழ உத்தரவாதம் அளிப்பதே அறிவியலின் நோக்கம் ! அறிவியலின் கடமை! இந்த நோக்கம் நிறைவேற இப்புவியிலுள்ளோர். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வியாபார