பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

447


"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யாக்கப் படின்”

என்ற திருக்குறளுக்கும்,

"இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும்
அறநிலை வாணிகன் ஆய்அலன்"

என்ற புறநானூற்று வரிகளுக்கும் வள்ளல் டாக்டர் அழகப்பர் இலக்கியமானவர்.

வள்ளல் அழகப்பர் புகழ் வளர்க! வாழ்க!

கம்பன் இலக்கிய உலகில் புதிய தடத்தைக் கண்டான்; அந்தத் தடத்தை நமக்கும் காட்டுகிறான். கம்பனுக்கு முன் அனைவரும் கடவுள் வெற்றி பெற்றார் என்றனர். சிலர் மன்னன் வெற்றி பெற்றனன் என்றனர். இலக்கிய உலகில் முதன்முதலில் "மானுடம் வென்றதம்மா!" என்று பாடுகிறான் கம்பன்! ஆம்! மானுடம் வெற்றி பெறவேண்டும் என்பது கம்பனின் விருப்பம்; விழைவு.

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!"

என்று புறநானூறு கூறும்! மானுடம் வெற்றிபெறுதல் வேண்டுமெனில் மானுடத்தின் பொறிகளும் புலன்களும் நனி சிறந்து விளங்குதல் வேண்டும். மானிடர் அறிவுடையராதல் வேண்டும்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்”

என்பது திருக்குறள். சென்ற காலத்தில் மானுடம் வெற்றி பொருந்திய வரலாற்றை இயக்கி வந்தமையை வரலாற்றில் காண்கிறோம். இலக்கியங்களில் படிக்கிறோம். ஆயினும் மானுடத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை அலட்சியப்படுத்திவிட முடியாது. மானுடத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைக் கணக்கில் எடுத்துக்