பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

57


நலம் பயக்குமா என்பதை ஆசிரியர்கள் ஆராய்க! அதுபோலவே பாட முடிவிலும் மாணாக்கர்கள் - ஆசிரியர் கற்பித்ததை வாங்கிக் கொண்டார்களா? என்பதைப் பரிவுடன் ஆராய்ந்தறிவது பயன்தரும். ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு அறிவு வழியிலும் அகவழியிலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருத்தல்வேண்டும். ஆசிரியர்கள் மாணாக்கர்கள்பால் உளமார ஆர்வம் காட்டினால் மாணாக்கர்களை எளிதில் திருத்தமுடியும்; திருப்பமுடியும் என்பதை ஆசிரியப் பெருமக்கள் அறிதல் வேண்டும்.

ஆசிரியர் கடமைகள்

இன்று பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணி இயந்திரம் போல உயிர்ப்பு இல்லாமலே நடைபெறுகிறது. பாடக் குறிப்புகள் எழுதுவதுகூட ஒரு சடங்காகப் போய்விட்டது. கல்வி அதிகாரிகள் வரும் நேரத்தில் ஒரே மூச்சில் பாடக் குறிப்பு எழுதும் ஆசிரியர்களும் உள்ளனர். தம் வகுப்பில் கற்பதில் கடைசி வரிசையில் (தரத்தில்) இருக்கும் மாணவர்களையும் நினைவிற்கொண்டு பாடக்குறிப்புகள் எழுதுவதில்லை. பாடக் குறிப்பு, ஒப்புநோக்குச் செய்திகள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஒப்பு நோக்குப் புத்தகங்கள் எடுத்துப் படித்துக் குறிப்பு எழுதும் பழக்கம் இல்லை.

ஆதலால், கற்பிக்கும் ஆசிரியருக்கும், கற்கும் மாணாக்கருக்கும் இடையே உள்ள இடைவெளி மிக அதிகம் என்ற உண்மையை உணர்த்தத்தான் வால் மட்டுமே நுழையவில்லை என்ற எலிக்கதை பிறத்தது. மாணாக்கனுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பு ஆசிரியர்களிடம் தேவை. கற்பிக்கும் முயற்சியை உரிய அளவு ஏற்காமல் மாணாக்கனுக்கு "முட்டாள்" பட்டம் சுட்டுவது, பிற்பட்ட சமூகத்தினை சார்ந்தவன் என்று கூறுவது முதலியன ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். இன்று

கு.xv.5