பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை விளக்கு

125


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு

என்ற குறளால் அறிக.

ஆதலால், பாரத நாட்டு ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு உடனடியான தேவை பாரத நாட்டு இலக்கியம் - அதாவது தேசீய இலக்கியம்! நிலம், சாதி, சமயம், இனம், மொழி ஆகிய எந்தச் சார்பினையும் சாராது, மானிட சமுதாயத்தின் மேம்பாட்டினைக் கருதியே செய்யப் பெற்ற நூலை, உடனடியாகப் பாரத நாட்டு இலக்கியமாக அறிவிக்க வேண்டும். இமயம் முதல் குமரி வரை வாழும் அனைத்து மக்களின் சிந்தனைக் கும் வாழ்க்கைக்கும் அடிப்படைச் சுருதியாகத் திருக்குறள் அமையவேண்டும். அது போழ்து பாரத ஒருமைப்பாடு உருவாகும்; பாரத சமுதாயமும் வாழும்.

வாழ்விக்க வந்த வள்ளுவம்

முன்னுரை

மிழ் காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்த மொழி. தமிழினம் தொன்மைப் பழமை நலம் சான்ற இனம்; வையத்துள் வாழ்வாங்கு வாழ வகையும் வழியும் கண்ட இனம், வளம்பல படைத்த இனம், வளத்துடன் வாழும் உயிர்க்கும் இலக்கணம் செய்த இனம். நிலவுலகங்கள் நெருங்கி வாரா முன்னம் நெஞ்சங்கள் நெருங்கிவர நெறி கண்ட இனம்; இருளகற்றி இன்பம் பெருக்கும் இனி நெறிகளைக் கண்ட இனம்; பாரையும் பரத்தினையும் இணைக்கும் இன்புறு காதல் நெறிகள் கண்ட இனம். இறையும் முறையும் கண்டு இனிது வழி நடத்திய இனம் துன்பத்திற்கு மருந்தாக இன்பத்திற்கு ஊற்றாக அமைவதாக