பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கல்வியைக் கற்றுக் கொள்ளாதவன் எப்படி வாழ்க்கையில் வெற்றி கொள்ளமுடியும்? இன்று, கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டும் நினைவுக்கு வருகிறது! ஏட்டுக்கல்வி மட்டும் கல்வியல்ல. பல்வேறு திறன்களையும் பண்பாட்டினையும் கற்றுக் கொள்வதும் கல்வியேயாம்!

ஒரு நாட்டில் சென்று வாழ்ந்தால், அந்நாட்டு மக்களுடன் கலந்து அந்நியமின்றி வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம். அங்ஙணம் வாழவில்லையெனில் சாதலை நிகர்த்த துன்பங்கள் விளையும்! சாகிற அளவு துன்பம் சூழினும் அவருடன் அந்நியமின்றி வாழக்கற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி வாழமுடியும்!

இன்றுள்ள சூழ்நிலையில் மனித குல நினைப்பே விழுமியது; இன்றியமையாதது. அதனை அடுத்துத்தான் நாட்டுவழிமக்கள்! மொழிவழி அமைந்த இனம்! சமயவழி அமைந்த சமுதாயம்! நாடு, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்து "மனிதகுல” உணர்வு வளரவேண்டும்! இன்று ஆங்கிலேயர் நன்றாக வாழ்கின்றனர்! அமெரிக்காவை நோக்குங்கள்! ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பல இனத்தவர்களும் கூடி வாழ்கின்றனர்! கூட்டரசு கண்டுள்ளனர்! அதனால், இன்று ஆங்கிலேயர் உலகத்தை இயக்கும் இனமாகத் திகழ்கின்றனர்! சீனர்களும் அப்படியேதான்!

தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்தொடங்கியே குடியேறி வாழ்கின்றனர்! ஆனால், தாம் சென்று குடியேறிய நாட்டைத் தமது நாடாக ஆக்கிக் கொள்ளும் திறனைக் கற்றார்கள் இல்லை! அந்தந்த நாட்டு மக்களுடன் இனம் கண்டு கொள்ள இயலாத நிலையில் கலந்து வாழ்ந்தார்கள் இல்லை! ஆங்கிலேயர் உலக மொழிகளுக்குத் தொண்டு செய்ததைப் போலத் தமிழர்கள் பிறமொழிகளுக்குத் தொண்டு