உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



449


இருக்கிறதோ இல்லையோ கேட்கிறார்கள்! இல்லை, ஒலிபெருக்கி மூலம் கேட்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இனிய செல்வ, இன்று நமது தேவை, சமுதாய அமைப்பு! சமுதாய அமைப்பு-இது உருவாகவில்லை! இனி எதிர்வரும் காலத்திலும் உருவாகாதுபோல் தெரிகிறது. நாடு முழுவதும் பல குழுக்கள்! ஒருங்கிணைப்பு இல்லாத கூட்டம்! வெறுங்கூட்டம்! கூச்சல் போடும் கூட்டம்! கலாட்டா செய்யும் கூட்டம்! இனிய செல்வ, சமுதாய நாகரிகத்திற்குப் பதிலாக கும்பல் கலாசாரம் (Mob Culture) வளர்கிறது, இதனால் உழைப்பாற்றல் வீணாகிறது; பொருளுற்பத்தி பாதிக்கிறது; அமைதி கெடுகிறது! இந்த அவலம் ஏன்? "நான்” தான் காரணம்! எல்லோரும் வளரத்தான் வேண்டும். குடியரசு நாட்டுக்கு இது அவசியமானதும் கூட! ஆயினும், வளராமலே-வளர்த்துக் கொள்ளாமலே தலைமை ஏற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்! விபரீதமான ஆசை; தன்னலம் சார்ந்த ஆசைகளால் தூண்டப்பெற்று செயல்படுகின்றனர். இத்தகைய மனப்போக்கில் செல்பவர்களுக்கு வரலாற்றைப் பற்றிய கவலை இல்லை. வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார்கள். தெரிந்தாலும் தெரியாததுபோல் நடிப்பார்கள். இல்லை-இல்லை மறந்துவிடுவார்கள். விளைவுகளைப் பற்றிய கவலையே இல்லை; எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். எதிர்விளைவுகளைத் தாங்கமுடியாமல் கூச்சல் போடுவார்கள்! பழி தூற்றுவார்கள்! அணுகிப் பார்த்தால் அற்பமான விஷயங்களுக்காக இவ்வளவு ஆரவாரம் என்று தெரியும்! இனிய செல்வ, இது மட்டுமா? இங்ஙனம் கோஷ்டி சேர்ப்பதிலே இவர்களுக்குப் பிழைப்பு வேறு நடக்கிறது! மக்களிடத்தில் நன்கொடை தண்டல்! ரெளடிசத்துக்குப் பயந்து பலர் கொடுக்கிறார்கள்! பண முடை இல்லை.

தி.30.