பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

241


கலைகள் எல்லாம் தமிழ் வழியிலேயே கற்க வேண்டும்" என்பதாகும்.

பாரதி, தாம் எழுதிய ‘பாஞ்சாலி சபத’த்தைத் தமது எழுத்துக்கள் மூலமே அறிமுகப்படுத்துகிறான்.

பாரதி, "பொன் வால் நரி" என்றொரு கட்டுக் கதையை ஆங்கிலத்தில் எழுதினான். இதற்கு நிறையப் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால், இந்தப் பாராட்டில் பாரதி மகிழவில்லை. ஏன்?

"தமிழில் - சொந்த மொழியில், சொந்த மூளையைக் கசக்கிப் பிழிந்து ‘பாஞ்சாலி சபதம்’ என்ற புத்தகம் எழுதி இருக்கிறேன். அது நன்றாக இருக்கிறது என்று ஒருவனும் ஒரு கடிதமும் எனக்கு எழுதவில்லை” என்கிறான்.

தாய் மொழி தமிழில் எழுதிய நூல்களைத் தமிழ் நாட்டார் படித்துப் போற்றவில்லை என்று பாரதி மனம் நொந்தான் வருந்தினான். இன்று வரையிலும் கூட இது நீடிக்கிறது.

பாரதி, கடவுள் நம்பிக்கை உடையவன். மதங்களில் நம்பிக்கை உடையவன். ஆயினும், பாரதி, இத்துறையில் தீவிரமாகச் சிந்தித்தான்; மாற்றங்களைக் காண விரும்பினான்.

பாரதி, கடவுள் வழிபாட்டுக் கொள்கையில் விவேகானந்தரை அப்படியே ஆதரிக்கிறான். விவேகானந்தர் "விடுதலையே என் மதம்” என்று கூறியவர். அவர் எழுதிய கடிதம் ஒன்றை எடுத்துத் தருகிறான்.

"முத்தி அல்லது விடுதலையே என் மதம்! இதை கட்டுப்படுத்த முயல்வது யாதாயினும் அதனை நான் போர் செய்தேனும், புறங்கொடுத்து ஓடியேனும் அகற்றி விடுவேன்.

என் வேலை முடிந்து போய்விட்டது என்ற உணர்ச்சி உண்டாகிறது. மிஞ்சிவந்தால் நான் இன்னும் மூன்று அல்லது