பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று வியந்து பாடுகின்றான். ஒரு புதுமையை அறிமுகப்படுத்தி இரண்டு பழமையை அகற்ற முயலுகின்றான். "சரித்திரத்தை மீறியது மனித சக்தி! ஆம்! சரித்திரம் சந்திரமண்டலத்தைப் பற்றிக் கூறிய கதைகளை இன்று பொய்யாக்கிவிட்டது! அப்புறம் இந்திரலோகம்! இந்திரன் தலைவன்! இன்னோரன்ன புராணங்களைப் பொய்யாக்கிவிட்டது. மனித சக்தி என்று மனித சக்தியைப் புகழ்ந்து பாடுகின்றான்.

இன்றைய மனித சமுதாயத்தை யதார்த்தமாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது. அவரவர் அவரவருடைய பெண்டு, பிள்ளைகள் என்றே வாழ்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு பொழுதேனும் பொதுப்பணியில் நாட்டம் செலுத்துவதில்லை. இவர்களையாவது ஒருபுறம் வரவேற்கலாம். இன்னும் பலர் யாதொரு பயனுமின்றி முச்சந்திகளில் அரட்டையடிப்பது, இங்குமங்குமாக நடப்பது, ஓடுவது, குறடு கண்ட இடத்தில் உட்கார்ந்து ஊர் வம்பு பேசுவது, என மலிவான அருவருக்கத்தக்க அரசியல் நடத்தி ஊரைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோருடைய மனித சக்தி, படைப்பாற்றலாக மாறினால் ஊர் வளரும்; மக்கள் நலம் பெறுவர். இவர்கள் செய்யமாட்டார்கள்; செய்யவே மாட்டார்கள்! இவர்கள் தலையில்லாத் தலைவர்கள். இவர்கள் பொதுப் பணியில் நினைவில்லாதவர்கள். இவர்களுக்குப் பொதுப் பணியில் நாட்டம் இல்லை; விருப்பம் இல்லை.

"பொதுப் பணியில் செலவழிக்க நினைக்கும்போது
பொருளில்லை
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே பொதுப்பணியில்
நினைவில்லை